டெல்லி,
தேசிய தலைநகர் டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் காற்று மாசு மிகப்பெரும் பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களில் வேளாண் செழிப்பாக இருக்கிறது. விவசாய ஆண்டின் இறுதியில் பயிர் கழிவுகளை எரித்து அழித்து, புதிய பயிரிடலுக்கு தயாராவார்கள். இந்த கழிவு எரிப்பு மூலம் டெல்லியில் காற்று மாசு ஏற்படுகிறது. காற்றின் தரம் (AQI) 100ஐ தாண்டினாலே அது, சுவாசிக்க ஏற்ற காற்று இல்லை. ஆனால் டெல்லியில் மாசு 400ஐ தாண்டியிருக்கிறது.
டெல்லியில் 39 காற்று மாசு கண்காணிப்பு மையங்கள் உள்ளன. இவற்றில் 32 மையங்களில் காற்று மாசு தரக் குறியீடு 400-க்கு மேல் பதிவாகியது. இது மிக மோசமான காற்று மாசு நிலை. நேற்று முன்தினம் 334-ஆக இருந்த காற்று மாசு அளவு நேற்று காலை 9 மணியளவில் 428 ஆக அதிகரித்தது.
3-வது நாளாக இன்றும் கடுமயான காற்று மாசு நிலவுகிறது. மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட தரவுகளின் படி, காற்றின் தரத்தை குறிக்கும் ஏகியூஐ குறியீட்டில் 409 என டெல்லியின் காற்று மாசை குறிப்பிட்டுள்ளது. இது மிகவும் மோசமான நிலையை குறிக்கும். பனிமூட்டம் போல காற்று மாசு நிலவுவதால், சாலைப்போக்குவரத்து மட்டும் இன்றி விமானப்போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. காற்று மாசு அதிகரித்து வருவதால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகள், கர்ப்பிணிகள் இந்த பிரச்னையால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். காற்று மாசு கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், அவை பெரிய அளவில் கைக்கொடுக்கவில்லை.
இந்த நிலையில், டெல்லியில் 1-5ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடங்களை நடத்த டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது எதிர்கொள்ளும் காற்று மாசு சிக்கல் இதன் மூலம் குறையும் என்றும் மாநில அரசு தெரிவித்திருக்கிறது. அதேபோல மாணவர்களுக்கான உடற்கல்வி வகுப்புகளும் நிறுத்தப்பட்டிருக்கின்றன.