அதிகனமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு; பயங்கர நிலச்சரிவு : நேபாளத்தில் பலி எண்ணிக்கை 170ஐ தாண்டியது!1

1 month ago 11

காத்மண்டு : நேபாளத்தில் கனமழை வௌ்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 170ஐ தாண்டியுள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளுள் ஒன்றான நேபாளத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் மட்டும் நேபாளத்தின் பல பகுதிகளில் 20 முதல் 30 செ.மீ மழை கொட்டி தீர்த்தது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வௌ்ளத்தில் மூழ்கி கிடக்கின்றன. மேலும் பல இடங்களில் வௌ்ள நீர் காரணமாக நிலச்சரிவுகளும் ஏற்படுகின்றன. கிழக்கு மற்றும் மத்திய நேபாளத்தின் பல இடங்கள் வௌ்ளத்தில் தத்தளிப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போயுள்ளது. பல பகுதிகளில் வௌ்ளம் சூழ்ந்துள்ளதால் தேசிய நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கனமழை நீடிப்பதால் காத்மண்டுவில் ஓடும் பாக்ரி நதியில் அபாய அளவை தாண்டி நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி தலைநகர் காத்மண்டுவில் 48 பேர் பலியாகி விட்டனர். காத்மண்டு எல்லையான தாடிங் மாவட்டத்தில் பேருந்து ஒன்று நிலச்சரிவில் புதைந்ததில் 19 பேர் உயிரிழந்தனர். மேலும் பக்தபூர் நகரில் நிலச்சரிவால் வீடு இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். மக்வான்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் கால்பந்து பயிற்சி மைதானத்தில் பயிற்சி செய்து கொண்டிருந்த கால்பந்து வீரர்கள் 6 பேர் பலியாகினர். மேலும் சிலர் வௌ்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இந்த சூழலில் நேற்றும் பல மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இதனால் ஒருபுறம் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், மறுபுறத்தில் மலைகளில் ஏற்பட்ட மண் சரிவால் அங்கு மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டன.

ராட்சத பாறைகளும் பெயர்ந்து உருண்டன.நேபாளத்தில் இதுவரை கனமழை வௌ்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளது. 42 பேர் மாயமாகி உள்ளனர். 111 பேர் காயமடைந்துள்ளனர். வௌ்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் 20,000க்கும் மேற்பட்ட மீட்பு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். வௌ்ளத்தில் சிக்கிய 3,626 பேர் பேர் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கனமழை வெள்ளம், நிலச்சரிவால் 322 வீடுகளும் 16 பாலங்களும் இடிந்து விழுந்து சேதமடைந்தன. நேபாளத்தில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்துள்ளதாக அந்நாட்டு மக்கள் கூறுகின்றனர். நாளையும் கனமழை நீடிக்கும் என்று நேபாள வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

The post அதிகனமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு; பயங்கர நிலச்சரிவு : நேபாளத்தில் பலி எண்ணிக்கை 170ஐ தாண்டியது!1 appeared first on Dinakaran.

Read Entire Article