சென்னை: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முன் அனுமதியைப் பெறாமல், மின்சாரம் கொள்முதல் செய்வதற்காக கோரப்பட்டுள்ள ஒப்பந்தப்புள்ளிகளை மின்சார வாரியம் ரத்து செய்ய வேண்டும். மின்சாரம் கொள்முதல் செய்வதற்காக ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரும் திட்டத்தை ஒழுங்குமுறை ஆணையத்திடம் தாக்கல் செய்து, அது விதிக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு தான் மின்சாரத்தை கொள்முதல் செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கோடைக்கால மின் தேவை கடுமையாக அதிகரிக்கும் என்பதால், அதை சமாளிப்பதற்காக தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முன் அனுமதியை பெறாமலேயே, ஒப்பந்தப்புள்ளிகளை மின்வாரியம் கோரியிருக்கிறது. மின்சார வாரியத்தின் இந்த அத்துமீறல் மிகவும் கவலையளிப்பதாக தெரிவித்திருக்கும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம், இனியும் இத்தகைய அத்துமீறல்கள் தொடரக்கூடாது என்றும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. ஆட்சியாளர்களின் சுயலாபத்திற்காக அரசும், மின்வாரியமும் எப்படியெல்லாம் விதிகளை வளைக்கின்றன என்பதற்கு இதுவே சான்று.