அதிக லாபம் தரும் முதலீடு வாய்ப்பு: போலி விளம்பரங்களை நம்பவேண்டாம் - பொதுமக்களுக்கு எச்சரிக்கை

4 weeks ago 4

மதுரை,

இணையவழிக் குற்றப்பிரிவு தலைமையகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பேஸ்புக் விளம்பரம் மூலம் சென்னை விமான நிலையத்தில் வேலை வாய்ப்பு என்ற பெயரில் ரூ.5.5 லட்சத்திற்கு மேல் மோசடி செய்த குற்றவாளியை கைது செய்துள்ளனர்.

வேலை பெறும் ஆசையில், புகாரளிப்பாளர் விளம்பரத்தில் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டார். வேலைவாய்ப்புக்காக பணம் செலுத்த வேண்டும் என கூறி, பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மொத்தமாக ரூ.5,58,902 செலுத்தச் செய்தனர். பணம் பெற்றவுடன், குற்றவாளிகள் அனைத்து தொடர்பையும் துண்டித்துவிட்டனர்.

புகாரின் பேரில், மதுரை மாவட்ட இணையவழிக் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணையில், அந்த தொகையில் ரூ.5,07,300, கண்டம்பட்டி, சேலம் பகுதியைச் சேர்ந்த கோபால் மகன் அசோக் குமாரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. அந்தப் பணம் தாரமங்கலம் பகுதியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஏடிஎம் மூலம் எடுக்கப்பட்டது கண்டறியப்பட்டது.

இந்த தகவலின் அடிப்படையில், ஏப்ரல் 18, 2025 அன்று காவல் ஆய்வாளர் திருமதி பிரியா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான சிறப்பு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு சேலத்திற்கு பயணித்து விசாரணை மேற்கொண்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், சேலம், தாரமங்கலம், மிளகை கரனூர், சிக்கம்பட்டி 2/102-ல் வசிக்கும் துரை மகன் பிரகாஷ் (வயது 32/25) என்பவரே, போலி விளம்பரத்தை உருவாக்கி, போலி கணக்குகள் உருவாக்கி, மோசடி பண பரிவர்த்தனைகளை மேற்கொண்ட முக்கிய குற்றவாளி என அடையாளம் காணப்பட்டது. அவரை சிறப்பு குழு கைது செய்துள்ளது.

விசாரணையில், குற்றவாளி செல்போன் கடை நடத்தி வருகிறார் என்றும், முன்பு விமான நிலையத்தில் ஏற்றுமதி மேலாளராக பணியாற்றிய அனுபவத்தை பயன்படுத்தி பலர் நம்பிக்கையை பெற்று இக்குற்றங்களை செய்துள்ளார் என்றும் தெரிவித்தார்.

இவர்மீது முன்பே தாரமங்கலம் காவல் நிலையத்தில் Cr. No. 41/2018-ன் கீழ் 109 CrPC-க்கிணையான வழக்கு உள்ளது. மேலும், விமான நிலைய வேலை வாய்ப்பு மோசடி தொடர்பாகவும் Cr. No. 654/2022-ன் கீழ் 406, 420, 294(b), 324, மற்றும் 506(2) IPC உடன் 4-TNPHW ACT பிரிவுகளின் கீழ் வழக்கும் பதியப்பட்டுள்ளது.

போலீசார் குற்றவாளியிடம் இருந்து முக்கிய ஆதாரங்களை பறிமுதல் செய்துள்ளனர். இதில் 7 மொபைல் போன்கள், 10 சிம் கார்டுகள், 1 பான் கார்டு, 9 ஏடிஎம் கார்டுகள், ஒரு பாஸ்போர்ட், ஒரு கார் மற்றும் மோசடிக்காக பயன்படுத்தப்பட்ட 2 ரப்பர் முத்திரைகள் அடங்கும்.

வேறு ஒரு வழக்கில், திருப்பூரை சேர்ந்த ஒருவரிடம் ரூ.25.79 லட்சம் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். Adit Pro எனும் போலியான டிரேடிங் செயலியை பயன்படுத்தி, பங்கு சந்தை முதலீடு பற்றிய வாட்ஸ்அப் குழு மூலமாக இந்த செயலி பரப்பப்பட்டது. இதில் பலர் முதலீடு செய்தனர். இதை நம்பி முதலீடு செய்த புகாரளிப்பாளருக்கு எந்த வருவாயும் கிடைக்கவில்லை. பின்னர் மோசடியை இணையவழிக் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

விசாரணையில், குற்றவாளியின் வங்கிக் கணக்கு S.K. Enterprises என்ற நிறுவனத்தின் பெயரில், திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியை சேர்ந்த ஆர். தினூஷன் என்பவரால் இயக்கப்படுவதாக கண்டறியப்பட்டது. உடனடி நடவடிக்கையாக, இன்ஸ்பெக்டர் திருமதி கே.டி. கலையரசி தலைமையிலான சிறப்பு குழு தினூஷனை கைது செய்தது.

விசாரணையில், குற்றவாளி சமீபத்தில் பெருமாநல்லூர் இலங்கை அகதி முகாமிலிருந்து வெளியேறியவர் என்றும், தன் வங்கிக் கணக்கை தன்னிடம் உள்ளவர்களிடம் கமிஷன் அடிப்படையில் வழங்கியிருப்பதும் தெரியவந்தது. இவரது வங்கிக் கணக்கு இந்தியா முழுவதும் 35 சைபர் குற்ற வழக்குகளுடன் தொடர்புடையது கண்டறியப்பட்டது.

இக்கைது, தமிழ்நாடு இணையவழிக் குற்றப்பிரிவால் மேற்கொள்ளப்பட்ட சைபர் குற்றங்கள் மற்றும் வேலைவாய்ப்பு மோசடிகளை கட்டுப்படுத்தும் பணியில் ஒரு முக்கிய முன்னேற்றமாகும்.

பொதுமக்களுக்கு அறிவுரை:

1. இணையத்தில் வரும் வேலைவாய்ப்பு விளம்பரங்கள் மிக நேர்த்தியாக இருந்தாலும், உண்மையான தகவல்களின்றி இருப்பின் அதை நம்பவேண்டாம்.

2. அதிக லாபம் தரும் முதலீடு வாய்ப்பு என்ற பெயரில் வரும் தகவல்களை நம்ப வேண்டாம்.

3. அதிக லாபம் உறுதி செய்கிறார்கள் என்றால் மோசடி வாய்ப்பு அதிகம் – எச்சரிக்கையாக இருங்கள்.

4. தனிப்பட்ட அல்லது நிதி சார்ந்த தகவல்களை தெரியாத நபர்களுடன் தொலைபேசி மூலம் பகிர வேண்டாம்.

5. உங்கள் வங்கிக் கணக்கிற்கு இரட்டைக் பாதுகாப்பு (Two-Factor Authentication) பயன்படுத்துங்கள்.

6. உங்கள் வங்கிக் கணக்கை அல்லது கிரிப்டோகரன்சி வாலெட்டை மற்றவர்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம். இது நிதி மோசடிக்கு பயன்படுத்தப்படலாம். இவ்வாறு ஈடுபட்டிருப்பது தெரிய வந்தால், கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

புகாரளித்தல்:

இதுபோன்ற மோசடிகளுக்கு நீங்கள் ஆளாகிவிட்டால், தயவுசெய்து 1930 என்ற உதவி எண்ணை அழைக்கவும் அல்லது www.cybercrime.gov.in இல் உங்கள் புகாரைப் பதிவு செய்யவும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article