அதிக சீட்டுக்காக அணி மாறமாட்டோம்: திமுகவுடன் சேர்ந்துதான் தேர்தலை சந்திப்போம்; திருமாவளவன் பேச்சு

3 hours ago 3

விழுப்புரம்: அதிக சீட்டுக்காக அணி மாறமாட்டோம்; திமுகவுடன் சேர்ந்துதான் தேர்தலை சந்திப்போம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெற்றதை கொண்டாடும் வகையில், விழுப்புரத்தில் விசிக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது பேசிய விசிக தலைவர் திருமாவளவன்; நடிகர்கள் கட்சி தொடங்கும் போதெல்லாம் விசிக-தான் பலவீனப்படும் என பேசுவார்கள். விஜயகாந்த் கட்சித் தொடங்கியபோதும் சொன்னார்கள். இப்போதும் சொல்கிறார்கள்.

ஆனால் யார் கட்சித் தொடங்கினாலும், அவர்களுக்கு என்ன செல்வாக்கு இருந்தாலும், விசிகவை அவர்களால் சேதப்படுத்த முடியாது. சினிமா கவர்ச்சியின் மூலமாக இளைஞர்களை திசைமாற்றி விட முடியாது. ஒரு நடிகரின் பின்னால் ஆட்டு மந்தை போல் இளைஞர்கள் திரும்புவார்கள் என்றால், அந்த இளைஞர்கள் திருமாவளவனுக்குத் தேவை இல்லை. திருமாவளவன் 25 ஆண்டுகளாக ஒரு பட்டாளத்தை விடுதலை சிறுத்தைகள் அதே வேகத்தில் வைத்துக் கொண்டுள்ளது. எந்த சரிவும் ஏற்படவில்லை, வீழ்ச்சியும் இல்லை. ஒரு அரசியல் கட்சியை 25 ஆண்டுகள் கடந்து தாக்குப் பிடிப்பதே சாதனை, வெற்றி.

தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகளுடன் இணைந்து இருப்பதால் தான் வெற்றி கிடைப்பதாக சிலர் ஏளனம் பேசி வருகின்றனர். பா.ம.க., ம.தி.மு.க., தே.மு.தி.க. போன்ற கட்சிகளும் தங்கள் செல்வாக்கை நிரூபித்து தான் கூட்டணியில் இணைந்துள்ளன. ஆண்ட கட்சிகள் தான் விடுதலை சிறுத்தைகள் கூட்டணிக்கு வேண்டும் என விரும்பும் நிலைக்கு நாம் உறுதியாக இருக்கிறோம். 2026 சட்டமன்றத் தேர்தலில் விசிகவுக்கு கூடுதல் இடங்களை கேட்டுப் பெற முயற்சிப்போம். கூடுதல் இடங்களுக்காக அணி மாறமாட்டோம்; திமுகவுடன் சேர்ந்துதான் தேர்தலை சந்திப்போம் என்று கூறினார்.

The post அதிக சீட்டுக்காக அணி மாறமாட்டோம்: திமுகவுடன் சேர்ந்துதான் தேர்தலை சந்திப்போம்; திருமாவளவன் பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article