அகமதாபாத் : அதானியின் சூரிய எரிசக்தி மின் பூங்காவுக்காக பாகிஸ்தான் உடனான எல்லை பாதுகாப்பு விதிகளையே பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு தளர்த்தி இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பிரதமர் மோடியின் நண்பர் உலக செல்வந்தர்களின் ஒருவரான அதானி, குஜராத் மாநிலம் கவ்டாவில் உலகின் மிகப்பெரிய சூரிய மின் சக்தி ஆலையை உருவாக்கி வருகிறார். கடந்த 4 ஆண்டுகளாக இதற்கான பணிகள் நடைபெற்று வந்தாலும் அண்மையில், இந்த சூரிய சக்தி மின் பூங்காவுக்காக அமெரிக்க முதலீட்டாளர்களிடம் இருந்து ஒப்பந்தங்களை பெற இந்திய அரசு அதிகாரிகளுக்கு ரூ.2,100 கோடி லஞ்சம் வழங்கியதாக நியூயார்க் ஃபெடரல் நீதிமன்றம் அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்ததன் மூலம் இந்த விவகாரம் தலைமை செய்திகளில் இடம்பெற்றது.
இந்த நிலையில் அதானியின் நிறுவனம் லாபம் ஈட்டுவதற்காக பாகிஸ்தான் உடனான எல்லை பாதுகாப்பு விதிகளில் ஒன்றிய அரசு திருத்தம் செய்து இருப்பது தற்போது அம்பலம் ஆகி உள்ளது. எல்லைப் பாதுகாப்பு விதிகளின் படி, பாகிஸ்தான் எல்லையில் இருந்து 10 கிமீ வரையும் எவ்வித கட்டுமானத்திற்கும் அனுமதி இல்லாமல் இருந்தது. ஆனால் குஜராத்தில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு மூலம் பாகிஸ்தான் எல்லையில் இருந்து 1 கிமீ வரை சூரிய மின் தகடுகள், காற்றாலைகளை அமைக்கும் வகையில், கடந்த 2023ம் ஆண்டு மே 8ம் தேதி எல்லைப் பாதுகாப்பு விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. இதனால் எல்லையில் பீரங்கிகள் ரோந்து செல்வதற்கும், எல்லையை கண்காணிப்பதற்கும் மதிப்பு ஏற்படக்கூடும் என்ற இந்திய ராணுவ அதிகாரிகளின் அச்சமும் புறந்தள்ளப்பட்டுள்ளது. ஹிண்டன்பெர்க் அறிக்கை, நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்ட் என அடுத்தடுத்து குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் அதானிக்காக நாட்டின் பாதுகாப்பிலும் பாஜக அரசு, சமரசம் செய்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
The post அதானியின் சூரிய எரிசக்தி மின் பூங்காவுக்காக பாகிஸ்தான் உடனான எல்லை பாதுகாப்பு விதிகளையே மாற்றிய ஒன்றிய பாஜக அரசு!! appeared first on Dinakaran.