புதுடெல்லி: இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரிய (செபி) தலைவர் மாதபி புச் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரசின் ஊடக மற்றும் விளம்பரத்துறை தலைவர் பவன் கேராவுடன் கலந்துரையாடும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை ராகுல் வெளியிட்டு தனது பதிவில் கூறியிருப்பதாவது:
அரசு நிறுவனத்தின் சீர்குலைவு அதிகாரத்துடன் நெருக்கமான மிகவும் ஆபத்தான வடிவிலான நட்புக்கு வழிவகுத்துள்ளது அதுவே, அதானியை காப்பாற்றுதல். ஒன்றியத்தில் தற்போதைய ஆட்சியானது ஏகபோகங்களை ஊக்குவிப்பது மட்டும் அல்ல, தேசத்தின் செல்வத்தை ஒரு சிலரின் கைகளில் தீவிரமாக குவிக்கிறது. அந்தவகையில், மாதபி புச் ஊழல் ஆரம்பத்தில் எதிர்பார்த்ததை விட ஆழமாக செல்கிறது.
அதானியின் நலன்கள் மற்றும் அவரது முரண்பட்ட நிறுவன சொத்து மதிப்பீடுகளை பாதுகாக்க செபி அமைப்பை புச் தவறாக பயன்படுத்தி இருக்கிறார். சாமானிய இந்தியர்களையும் அவர்களின் முதலீடுகளையும் பாதுகாக்கும் பொறுப்பில் உள்ளவர்கள் தங்கள் பொறுப்புகளை மறந்து, பெரிய அளவிலான ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
காங்கிரஸ் தொடர்ந்து இந்த பிரச்னையை எழுப்பி வருகிறது. இந்த ஊழல்களை விசாரித்து, பொதுமக்களுக்கு உண்மையை அம்பலப்படுத்துகிறது’’ என்றார். இந்த வீடியோவை பகிர்ந்துள்ள காங்கிரஸ் கட்சி, ‘அதானி குழுமத்தைப் போல ஒரு தனி நிறுவனத்திற்கு நன்மை பயக்கும் வகையில் பங்குச்சந்தையைக் கையாளுவதில் செபி தலைவர் ஈடுபடும்போது, அனைத்து முதலீட்டாளர்கள் பணமும் ஆபத்தில் உள்ளது’ என கூறியுள்ளது.
The post அதானிக்காக செபி அமைப்பை தவறாக கையாண்ட மாதபி புச்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.