
தமிழக பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன் இன்று பொறுப்பேற்றுள்ளார். சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்ற பிரமாண்ட நிகழ்ச்சியில், நயினார் நாகேந்திரன் பா.ஜ.க. மாநில தலைவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். மேலும், மாநில தலைவருக்கான சான்றிதழையும் அவர் பெற்றுக்கொண்டார்.
அதேவேளை, தமிழக பா.ஜ.க. தலைவராக செயல்பட்டு வந்த அண்னாமலை அந்த பொறுப்பில் இருந்து விடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பா.ஜ.க. மாநில தலைவராக இருந்தபோது கடந்த ஆண்டு டிசம்பர் 26ம் தேதி அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தி.மு.க. ஆட்சியை அகற்றும்வரை செருப்பு அணியமாட்டேன் என்று சபதம் எடுத்தார்.
இந்நிலையில், பா.ஜ.க. மாநில தலைவராக பொறுப்பேற்ற நயினார் நாகேந்திரன் நிகழ்ச்சி மேடையில் அண்ணாமலைக்கு செருப்பு வழங்கினார். அண்னாமலை காலில் அணிந்துகொள்ள நயினார் நாகேந்திரன் செருப்பு வழங்கினார். அந்த செருப்பை அண்ணாமலை அணிந்துகொண்டார்.
தி.மு.க.வை ஆட்சியிலிருந்து அகற்றும்வரை செருப்பு அணியமாட்டேன் என்று கூறிய அண்ணாமலை பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் வேண்டுகோளை ஏற்று செருப்பு அணிந்துள்ளார்.