சென்னை,
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) வெளியானது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சென்னை ஐகோர்ட்டு இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த நிலையில், மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிட்டது. இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழு அளித்துள்ள பரிந்துரையின் பேரில் ஞானசேகரன் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. குழுவின் பரிந்துரை அடிப்படையில் போலீசார் இந்நடவடிக்கையை எடுத்துள்ளனர். இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து சென்னையில் இன்று பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் தலைமை செயலகத்தை நோக்கி பாஜகவினர் பேரணியாக செல்ல முயன்றனர் . தொடர்ந்து பாஜகவினரை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.