சென்னை: “பெண்கள் பாதுக்காப்பில் உண்மையான கவனம் செலுத்தாமல் அண்ணா பல்கலை. விவகாரத்தை அரசியலாக்குவது ஏன்?” என ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கோரிய பாமக மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதற்கிடையில், அண்ணா பல்கலை. விவகாரத்தில் ஆளும் திமுக அரசைக் கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற சவுமியா அன்புமணி உள்ளிட்ட பாமக நிர்வாகிகளை போலீஸார் கைது செய்தனர்.
அரசியலாக்குவது ஏன்? இதுதொடர்பாக பாமக வழக்கறிஞர் பாலு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று முறையீடு செய்தார். அப்போது நீதிபதி, இந்த விவகாரத்தை ஏன் அரசியல் ஆக்குகிறீர்கள்? என கேள்வி எழுப்பினார். போராட்டம் நடத்தும் ஒவவொருவரும் முதலில் தங்கள் மனதில் கைவைத்து கூறுங்கள் இந்த சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்படுகிறதா? பெண்கள் பாதுக்காப்பில் உண்மையான கவனம் செலுத்தாமல் அண்ணா பல்கலை. விவகாரத்தை அரசியலாக்குவது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.