தமிழ்நாட்டில் பருவநிலை மாற்றத்தால், மழை பொழியும் நாட்கள் குறைந்து சீரற்ற முறையில் அதிக கனமழை பொழிவது வழக்கமான நிகழ்வாக மாறிவருகிறது. இம்மழை நீரை அதிக அளவில் சேகரித்து வைத்தால் மட்டுமே கோடை கால நீர்த் தேவையை ஈடுசெய்ய முடியும். ஆனால் தமிழ்நாட்டில் அணைகள் மற்றும் தடுப்பணைகள் கட்டப்பட்டதும், தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு இணைப்பு திட்டம், காவிரி குண்டாறு நதி நீர் இணைப்பு போன்ற திட்டங்களும் வரலாற்றில் தற்போதும் பேசப்பட்டு வருகிறது.
தடுப்பணைகள் கட்டுவதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்பதால் ஒட்டுமொத்த வேளாண் உற்பத்தியை அதிகரிக்க செய்ய முடியும். அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப சாகுபடியை அதிகரிக்கவில்லை என்றால் வருங்கால சந்ததிகளுக்கு உணவு பஞ்சம் ஏற்படும்.
கடந்த 1967 முதல் 2011 வரை 42-க்கும் மேற்பட்ட அணைகள் கட்டப்பட்டன. தும்பலஹள்ளி, சின்னாறு, குண்டேரிப் பள்ளம், வறட்டுப்பள்ளம், பாலாறு, பொருந்தலாறு, வரதமா நதி, வட்டமலைக்கரை ஓடை, பரப்பலாறு, பொன்னியாறு, மருதா நதி உள்பட 42 ஆறுகளில் 42 அணைகள் கலைஞர் ஆட்சியில் கட்டப்பட்டது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இனி புதிதாக அணைகள் கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது அதீத நிலத்தடி நீர்ப் பயன்பாட்டால் ஏற்படும் பற்றாக்குறையைப் போக்குவதற்காகவே, மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தின் வழிகாட்டுதலால் ஒன்றிய-மாநில அரசுகள் இணைந்து பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. செயற்கைவழியில் நிலத்தடி நீரைச் சேமிக்கும் திட்டங்களான தடுப்பணைகள், உறிஞ்சு குளங்கள், பண்ணைக் குட்டைகள், செயலற்ற ஆழ்துளை கிணற்றுடன் இணைக்கப்பட்ட உறிஞ்சு குழிகள் போன்றவை தொலை உணர்வு செயற்கைக்கோள் உதவியுடன் புவித் தகவல் அமைப்புத் (ஜிஐஎஸ்) தொழில்நுட்பத்தால் உகந்த இடங்களில் கட்டப்பட வேண்டும்.
இதனால் அதீதப் பயன்பாட்டால் ஏற்பட்ட நிலத்தடி நீர்ப் பற்றாக்குறையை தற்போதைய கனமழையின் மூலம் போக்க முடியும். கடல்நீர் உட்புகாமல் இருக்கவும், நிலத்தடி நீர் அதிகரிக்கவும் தடுப்பணைகள் கட்டுவதில் தற்போதைய தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் தமிழக சட்டசபையில் நேற்று தடுப்பணைகள் கட்டுவதற்கு முக்கிய அறிவிப்புகள் வெளியானது. அதில் முக்கிய ஆறுகளில் வெள்ளக் காலங்களில் கிடைக்கும் நீரை சேமித்து, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும், வெள்ளநீரின் தீவிரத்தை கட்டுப்படுத்தவும், 15 மாவட்டங்களில் 21 இடங்களில் தடுப்பணைகள் அமைக்கும் பணி ரூ.375 கோடியில் மேற்கொள்ளப்படும்.
8 மாவட்டங்களில் 9 இடங்களில் அணைக்கட்டுகள் அமைக்கும் பணி ரூ.185 கோடியில் மேற்கொள்ளப்படும். 4 மாவட்டங்களில் 4 இடங்களில் ஆறுகளின் குறுக்கே புதிய நீரொழுங்கிகள் அமைக்கும் பணி ரூ.6 கோடியில் மேற்கொள்ளப்படும். டெல்டா மாவட்டங்களில் அதிகமான படுகை அணை, தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
பாசன நிலங்களுக்கு நீர் வழங்குவதை உறுதி செய்யவும், நீர் வீணாவதை தடுக்கவும், 35 மாவட்டங்களில் உள்ள பழுதடைந்துள்ள 149 பாசன அமைப்புகளில் புனரமைப்பு, மறுசீரமைப்பு மற்றும் மறு கட்டுமானம் செய்யும் பணிகள் ரூ.722 கோடியே 55 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும் போன்ற ஏராளமான அறிவிப்புகள் வெளியானது.
காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளில் அதிகமான தடுப்பணைகள் கட்டப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளதால் ஆழ்துளை கிணறு மூலம் முப்போகம் சாகுபடி செய்யும் டெல்டா விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுவதால் நீர் மேலாண்மை திட்டத்தை சிறப்பாக கொண்டு செல்வார் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
The post அணைகளின் அரசு appeared first on Dinakaran.