பெய்ரூட்: இஸ்ரேல் உளவுத்துறையின் சைபர் தாக்குதலால் ஈரான் அரசின் செயல்பாடுகள் முடங்கின. அணுசக்தி தளங்களின் ரகசிய தகவல்கள் திருடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் – இஸ்ரேல் இடையிலான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் ஈரானின் சிவில் ஏவியேஷன் அமைப்பு விமான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது செல்போன்களைத் தவிர பேஜர்கள் மற்றும் வாக்கிடாக்கிகள் போன்ற மின்னணு தகவல் தொடர்பு சாதனங்களை விமானங்களில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, செக் இன்கள் மற்றும் லக்கெஜ்களில் பேஜர்கள் மற்றும் வாக்கிடாக்கிகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஈரானில் விமான பயணிகள் செல்போன்களைத் தவிர மற்ற எந்த தகவல் தொடர்பு சாதனங்களையும் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஈரான் இன்டர்நேஷனல் இங்கிலீஷ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, கடந்த மாதம் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோரின் பேஜர்கள், வாக்கி டாக்கிகள் ஆகியவை திடீரென வெடித்து சிதறின. இந்த சம்பவத்தில் 3000க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அந்த தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் அரசு மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த 5ம் தேதி எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம், துபாயிலிருந்து அல்லது துபாய் வழியாக செல்லும் விமானங்களில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் தங்களின் பேஜர்கள் மற்றும் வாக்கிடாக்கிகளை தடை செய்தது. முன்னதாக நேற்று ஈரானில் கடுமையான சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஈரான் அரசின் நீதித்துறை, சட்டத்துறை மற்றும் நிர்வாகத்துறை ஆகிய மூன்று முக்கிய துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால் ஈரான் அரசு செயல்பாடுகள் முடங்கியுள்ளன.
மேலும் அந்த துறைகளின் தகவல்கள் திருடப்பட்டதாக ஈரான் அரசு அறிவித்தது. மேலும் தங்களின் அணுசக்தி வசதிகள், எரிபொருள் விநியோகம், நகராட்சி நெட்வொர்க்குகள், போக்குவரத்து நெட்வொர்க்குகள், துறைமுகங்கள் மற்றும் பல முக்கிய துறைகள் மீது சைபர் தாக்குதல் நடத்த குறி வைக்கப்பட்டுள்ளதாக ஈரான் சர்வதேச அமைப்பு தெரிவித்தது. இதனிடையே ஈரானின் பொருளாதாரத்தை முடக்கும் வகையில், ஈரானின் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதியில் ஈடுபட்டிருக்கும் 10 நிறுவ னங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
The post அணுசக்தி தளங்களின் ரகசிய தகவல் திருட்டு; ஈரான் மீது இஸ்ரேல் சைபர் தாக்குதல்: அரசு செயல்பாடுகள் முடங்கியது appeared first on Dinakaran.