அட்டப்பாடி மலையோர கிராமத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம்

2 weeks ago 5

பாலக்காடு : பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி மலையோர கிராம பகுதியில் வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பெய்வதால் மன்னார்காடு – தாவளம் வரையில் சாலைகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிககப்பட்டுள்ளது. அட்டப்பாடி மலையோரங்களில் கடந்த சில நாட்களாக தீவிரமாக வட கிழக்கு பருவமழை பெய்து வருகின்றது. இதனால் பவானி, குந்திப்புழா, சிறுவாணி, அமைதிப்பள்ளத்தாக்கு ஆகிய இடங்களில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இரவு – பகல் நேரங்களில் கனமழை பெய்தபடி உள்ளது. மன்னார்க்காடு – ஆனைக்கட்டி – மன்னார்க்காடு சாலையில் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும், கூளிக்கடவு – சிற்றூர் சாலையில் மூச்சிக்கடவு பகுதியில் மூங்கில் மரங்கள் சாய்ந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை மன்னார்காடு தீயணைப்பு வீரர்கள், பேரிடர் மீட்பு குழுவினர் ஆகியோர் ஒருங்கிணைந்து அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.

மேலும் சுண்டகுளம் ஊரில் ராஜேஷ் என்பவரின் வீட்டின் சுவர் இடிந்து சமையல் அறை சேதமடைந்தது. இதனால் வெள்ள நிவாரண முகாம்களுக்கு மாற்றபட்டனர். மஞ்சிக்கண்டியில் சிவகாமி என்பவரின் வீட்டின் மண் சுவர் இடிந்து அவரது குடும்பத்தினர் முகாமிற்கு மாற்றப்பட்டனர். புலியரா சாலையில் ஒன்றுக்கும் மேற்பட்ட மரங்களின் கிளை ஒடிந்து விழுந்ததில் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பாலக்காடு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆறுகளில் மழை வெள்ளம் கரை புரண்டு செல்கிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் விடுக்கப்பட்டது. மாவட்டத்தின் முக்கிய அணைகளில் ஒன்றான மலம்புழா அணையின் நீர்ப்பிடிப்பு சுற்றுவட்டாரங்களில் வட கிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்வு ஏற்பட்டது.

அணையின் பாதுகாப்பு கருதி அணையின் மதகுகள் வழியாக 5 செ.மீ அளவிற்கு உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கல்பாத்தி, கடுக்காம்குன்று, பரளி, மங்கரை, ஒத்தப்பாலம் மற்றும் பட்டாம்பி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதிகளில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

The post அட்டப்பாடி மலையோர கிராமத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் appeared first on Dinakaran.

Read Entire Article