நன்றி குங்குமம் டாக்டர்
வயிற்றுவலி, தலைவலி போன்ற சின்னச் சின்ன பிரச்னைகளுக்கு டாக்டரை அணுக வேண்டிய அவசியமில்லை. நம் வீட்டில் உள்ள அஞ்சறைப் பெட்டியை திறந்தாலே அதற்கான தீர்வு கிடைக்கும்.
* ஒரு வெற்றிலையில் ஒரு தேக்கரண்டி ஓமம், 2 கல் உப்பு வைத்து மடித்து சாப்பிட வயிற்று வலி பறக்கும். தொப்புளை சுற்றி சிறிது விளக்கெண்ணெய் தடவினாலும் குணமாகும். சாதம் கொதிக்கும் கஞ்சி, பனங்கற்கண்டு, நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து சிறிது சூட்டோடு குடிக்க வலி பறந்து போகும்.
* அரை கப் தயிரில் ஒரு தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து வெறும் வயிற்றில் சாப்பிட அடிவயிற்று வலி, சீத பேதி மறையும்.
* சீரகத்தைப் பொடித்து உப்பு சேர்த்து சூடான சாதத்தில் நெய் விட்டு சாப்பிட வயிற்று வலி குணமாகும்.
* வேப்பம் பூவை நெய்யில் வறுத்து சுடு சாதத்தில் சிறிது உப்பு சேர்த்து கலந்து சாப்பிட வயிற்று உபாதைகள் மறையும்.
* தண்ணீரில் சீரகம் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து குடித்து வந்தால், உடல் புத்துணர்ச்சி பெறும்.
* சூடான நீரில் சுக்குப் பொடி சேர்த்து அருந்தினால் வாயு தொல்லை நீங்கும். சுக்குப் பொடியுடன் வெல்லம் சேர்த்து சாப்பிட உணவு எளிதில் செரிமானமாகும்.
* சளியுடன் கூடிய இருமலுக்கு சூடான பாலில் சிறிது மஞ்சள் தூள் கலந்து சாப்பிட இருமல் குணமாகும்.
* கசகசாவை பாலில் அரைத்து அருந்த உடல் குளிர்ச்சியாகும்.
* இஞ்சி, தனியா, சீரகம் இவற்றை நீர் சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டி ஒரு மூடி எலுமிச்சம் பழம் பிழிந்து அருந்த பித்த வாந்தி குணமாகும்.
* வேப்பங்கொட்டை, சுக்கு கொர கொரப்பாக இழைத்து பூச தலைவலி காணாமல் போகும்.
தொகுப்பு: சுதா, சென்னை.
The post அஞ்சறைப் பெட்டி ஆரோக்கியம்! appeared first on Dinakaran.