
தமிழ்நாடு பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
தனியார் பால் நிறுவனத்தின் கருவூல மேலாளராகப் பணியாற்றி வந்த நவீன் என்பவர், அந்த நிறுவனத்தில் பணம் கையாடல் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, சென்னை கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் பாண்டியராஜன் விசாரித்து வந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 27-ம் தேதி, நவீன் மீது புகாரளித்த நிலையில், சுமார் இரண்டு வாரங்களாகியும், சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யாமல், துணை ஆணையரே நேரடியாக விசாரித்து வந்தது ஏன் என்ற கேள்வி எழுகிறது. துணை ஆணையர் பாண்டியராஜன் தற்போது விடுமுறையில் சென்றிருப்பதும் பலத்த சந்தேகத்தை எழுப்புகிறது.
திருப்புவனம் இளைஞர் அஜித்குமார், காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட துயர சம்பவத்தின் வடு மறையும் முன்பே, மீண்டும் காவல்துறை சட்டத்தை மீறிச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்றால், உண்மையில் காவல்துறை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதே உண்மை.
தமிழக அரசின் உள்துறையைக் கட்டுப்பாட்டில் வைக்க இயலாமல் செயலிழந்து விட்டாரா முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்? உங்கள் பொறுப்பற்ற செயல்பாடுகளால் இன்னும் எத்தனை சட்ட மீறல்களைப் பொதுமக்கள் சகித்துக்கொள்ள வேண்டும்? உங்கள் நிர்வாகத் தோல்விகளுக்கு, வெறும் மன்னிப்பு மட்டுமே போதுமா?
உடனடியாக, நவீன் மரணம் குறித்த நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்றும், இரண்டு வாரங்களாக வழக்குப் பதிவு செய்யாமல், நவீன் மற்றும் அவரது குடும்பத்தினரை மனஉளைச்சலுக்கு உள்ளாக்கிய கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.