அஜித் தோவல் சீனாவுக்கு பயணம்: இருதரப்பு சிறப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் நாளை பங்கேற்பு

4 weeks ago 6

பீஜிங்,

இந்திய மற்றும் சீன நாடுகளின் சிறப்பு பிரதிநிதிகளுக்கான பேச்சுவார்த்தை நாளை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் புதுடெல்லியில் இருந்து புறப்பட்டு சீன தலைநகர் பீஜிங் நகரை இன்று சென்றடைந்துள்ளார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கிழக்கு லடாக்கில் இரு நாடுகளின் படைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலால், எல்லை பகுதியில் கூடுதலாக ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். இதனால், 4 ஆண்டுகளாக இருதரப்பு உறவுகளுக்கான பேச்சுவார்த்தை நடைபெறாமல் இருந்தது. அதன்பின்னர் இருதரப்பிலும் ராணுவ அதிகாரிகள் அளவிலான உயர் மட்ட குழுவினர் கலந்து கொண்டு, பல சுற்றுகளாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, படைகள் வாபஸ் பெறப்பட்டன.

இந்த சூழலில், அஜித் தோவலின் இந்த சீன பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த பயணத்தில், இருதரப்பு உறவுகளை மீண்டும் கட்டமைப்பதற்காக, பல்வேறு விவகாரங்கள் பற்றி அவர் ஆலோசனை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தையை முன்னிட்டு, சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் லின் ஜியான் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, கடந்த 24-ந்தேதி ரஷியாவின் கஜன் நகரில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் என நம்முடைய இரு நாட்டு தலைவர்கள் இடையே ஏற்படுத்தப்பட்ட பொதுவான புரிதல்களின் அடிப்படையிலான உள்ளார்ந்த ஈடுபாட்டுக்கு மதிப்பளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என தெரிவித்து உள்ளார்.

பேச்சுவார்த்தை மற்றும் தகவல் தொடர்பு வழியே பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்துவது, நம்முடைய உள்ளார்ந்த ஈடுபாடுகளுக்கு மதிப்பளிப்பது, வலுவான மற்றும் நிலையான வளர்ச்சியை மீண்டும் அடைவதற்காக நம்முடைய இருதரப்பு உறவுகளுக்கு ஊக்கமளிப்பது ஆகியவற்றுக்காக இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Read Entire Article