அங்கீகாரம் இல்லாத மருத்துவ கல்லூரிகளில் சேர வேண்டாம் தேசிய மருத்துவ ஆணையம் எச்சரிக்கை தகுதியான கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் பட்டியல் வெளியீடு

4 hours ago 2

வேலூர், மே 23: அங்கீகாரம் இல்லாத மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர வேண்டாம். தகுதியான கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. என்று தேசிய மருத்துவ ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாடு முழுவதும் அங்கீகாரமில்லாத மருத்துவக்கல்லூரிகளிலும், வெளிநாடுகளில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் தவறாக வழிநடத்தப்படுவது தொடர்பாகவும் தேசிய மருத்துவ ஆணையம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. நாடு முழுவதும் அரசு மருத்துவம், பல் மருத்துவ கல்லூரிகளில் இருந்து 15 சதவீதம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. இந்த இடங்கள் மற்றும் எய்ம்ஸ், ஜிப்மர், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் (டிஜிஎச்எஸ்) மருத்துவ கலந்தாய்வு குழு (எம்சிசி) ஆன்லைன் மூலம் நடத்துகிறது.

தமிழகத்தில் அனைத்து அரசு, சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வை தமிழக மருத்துவ கல்வி, ஆராய்ச்சி இயக்ககம் நடத்துகிறது. இந்தியாவில் மருத்துவம் படிக்க இடம் கிடைக்காதவர்கள் பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சீனா, இங்கிலாந்து, உக்ரைன், கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று மருத்துவம் படிக்கின்றனர். இந்நிலையில், மருத்துவ கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இதுதொடர்பாக என்எம்சி வெளியிட்ட அறிவிப்பில், ‘மருத்துவ படிப்புகளை தொடங்கவும், தொடர்ந்து நடத்தவும் தேசிய மருத்துவ ஆணைய அங்கீகாரம் கட்டாயம் பெற வேண்டும். ஆனால், சில கல்லூரிகள் அத்தகைய அனுமதி இல்லாமல் மாணவர் சேர்க்கையை நடத்துவதாக தெரிய வந்துள்ளது. அவ்வாறு அங்கு மேற்கொள்ளப்படும் மாணவர் சேர்க்கை சட்டப்பூர்வமாக செல்லாது.

இவ்விஷயத்தில் மாணவர்களும், பெற்றோர்களும் கவனமுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அங்கீகாரம் இல்லாத கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடந்து வருவது தொடர்பாக வந்த புகார்களை தொடர்ந்து அந்நிறுவனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல, வெளிநாடுகளில் எந்த மருத்துவ படிப்புகளை படித்தாலும், இந்தியா திரும்பியதும் மருத்துவராக பணியாற்றலாம் என்று மாணவர்களை ஒரு சிலர் தவறாக வழிநடத்துகின்றனர். குறிப்பாக வெளிநாட்டு மருத்துவக்கல்வி நிறுவனங்களின் சார்பில் இந்தியாவில் செயல்படும் ஏஜென்டுகள், பிரதிநிதிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

வெளிநாடுகளில் மருத்துவம் படிப்பவர்கள் இந்தியாவில் மருத்துவராக தொடர பல்வேறு விதிமுறைகள் உள்ளன. தகுதி தேர்வு, உள்ளுறை பயிற்சி, பாடத்திட்டம் மற்றும் பயிற்று மொழி தகுதிகள் என பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. அவை அனைத்தையும் நிறைவு செய்தால் மட்டுமே, இந்தியாவில் மருத்துவராக பதிவு செய்ய முடியும். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் மருத்துவம் படிக்க, தேசிய மருத்துவ ஆணைய விதிகளை கடைபிடிப்பது கட்டாயம். இதற்காக அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக்கல்லூரிகள், பல்கலைக்கழங்கள் பட்டியல் தேசிய மருத்துவ ஆணையத்தின் இணையதளத்தில் (https://www.nmc.org.in) வெளியிடப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் அறிந்து செயல்பட வேண்டும். அங்கீகாரம் இல்லாத மருத்துவ கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க வேண்டாம். அதுபோன்ற கல்லூரிகள் மருத்துவ படிப்புகளில் சேருமாறு அழைப்பு விடுத்தால், தேசிய மருத்துவ ஆணையத்தில் புகார் அளிக்கலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அங்கீகாரம் இல்லாத மருத்துவ கல்லூரிகளில் சேர வேண்டாம் தேசிய மருத்துவ ஆணையம் எச்சரிக்கை தகுதியான கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் பட்டியல் வெளியீடு appeared first on Dinakaran.

Read Entire Article