சென்னை: அக்டோபர் 3-வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; அக்டோபர் 3-வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும். குறுகிய காலத்தில் அதிக மழை பெய்யும் நிகழ்வு தற்போது அதிகமாக நடக்கிறது. லா-நினா உருவான கடந்த 42 ஆண்டுகளில் 29 ஆண்டுகளில் இயல்பைவிட அதிக மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக இருக்கும். வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 112% கூடுதலாக பெய்யக் கூடும்.
தமிழ்நாடு, கேரளா, தெற்கு உள்கர்நாடகாவில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்யும். நெல்லை உள்பட 17 மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்துள்ளது. தென்மேற்கு பருவமழை, டெல்டா மாவட்டங்களில் இயல்பைவிட குறைவாக பெய்துள்ளது. கடந்தாண்டை விட 14% அதிகமாக தென்மேற்கு பருவமழை பெய்துள்ளது. வடதமிழ்நாட்டில் இயல்பைவிட அதிகமாக வடகிழக்கு பருவமழை பெய்யக் கூடும்.
தென்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட குறைவாக பதிவாகக் கூடும். பசிபிக் பெருங்கடலில் வெப்பத்தின் அளவு குறைந்துள்ளதால் வடகிழக்கு பருவமழை காலத்தில் லா-நினா உருவாக 80% வாய்ப்பு உள்ளது. லா-நினா உருவானாலும் கூட மழை அளவு பாதிக்காது என்று வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
The post அக்டோபர் 3-வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் தகவல் appeared first on Dinakaran.