அக். 7: ஓராண்டை நெருங்கும் இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதல்: பற்றி எரியும் மத்திய கிழக்கு - அடுத்தது என்ன? ஒரு அலசல்

3 months ago 24

ஜெருசலேம்,

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனம் இரு பகுதிகளாக உள்ளது. காசா முனை, மேற்கு கரை என பாலஸ்தீனத்தின் 2 பகுதிகளையும் வெவ்வேறு அமைப்புகள் நிர்வகித்து வருகின்றன.

காசா முனையை ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நிர்வகித்து வருகின்றனர். அதேவேளை, மேற்கு கரையை முகமது அப்பாஸ் தலைமையிலான அரசு நிர்வகித்து வருகிறது. காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினரை இஸ்ரேல் பயங்கரவாதிகளாக கருதுகிறது. அதேபோல், காசா முனை, மேற்கு கரையில் ஹமாஸ் ஆயுதக்குழுவை போன்று பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்பட பல்வேறு ஆயுதக்குழுக்களும் உள்ளன.

பாலஸ்தீனத்தின் காசா முனை, மேற்கு கரையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழு உள்பட பல்வேறு ஆயுதக்குழுக்களுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. அதேபோல், இஸ்ரேலின் அண்டை நாடுகளான லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள், ஈராக்கில் செயல்பட்டுவரும் பயங்கரவாத குழுக்கள், சிரியாவில் செயல்பட்டு வரும் பயங்கரவாத குழுக்களுக்கும், ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. இந்த குழுக்களுக்கு ஈரான் ஆயுத உதவியும் செய்து வருகிறது. இந்த குழுக்கள் இஸ்ரேலை அழிக்கும் நோக்கை முதன்மையாக கொண்டு செயல்பட்டு வருகின்றன.

மேற்கு கரை, காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட பிற ஆயுதக்குழுக்கள் இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றன. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தி வந்தது. அதேவேளை, மேற்கு கரை, காசாவில் இஸ்ரேலும் அவ்வபோது தாக்குதல் நடத்தி வந்தது.

2023 அக்டோபர் 7 : இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல்

காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் 2023 அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். தெற்கு இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக்குழுவினர் கொடூரமான தாக்குதல் நடத்தினர்.

காசா முனையில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேல் மீது ஏவப்பட்டன. மேலும், இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டுக்கொன்றனர். இந்த கொடூர செயலை சமூக வலைதளத்தில் நேரலையில் ஒளிபரப்பு செய்தனர். இந்த சம்பவத்தின்போது இஸ்ரேலிய பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகளுக்கும் உள்ளாகினர்.

1,139 பேர் பலி;

இஸ்ரேல் மீது அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நடத்திய கொடூர தாக்குதலில் ஒரேநாளில் 1,139 பேர் கொல்லப்பட்டனர்.

பணய கைதிகள்:

இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடத்தி சென்றது.

ஹிஸ்புல்லா தாக்குதல்:

ஹமாஸ் ஆயுதக்குழுவினர் அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்திய நிலையில் அதற்கு அடுத்த நாளே லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது தாக்குதலை தொடங்கினர்.

ஆபரேஷன் அயன் ஸ்வாட்:

இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து ஆபரேஷன் அயன் ஸ்வாட் என்ற பெயரில் ஹமாஸ் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் ஆயுதக்குழுவினர் சுட்டு வீழ்த்தப்பட்டனர். ஹமாசால் தகர்க்கப்பட்ட இஸ்ரேலின் எல்லைகள் மீண்டும் சீரமைக்கப்பட்டன.

காசாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் படை:

எல்லைகள் பாதுகாக்கப்பட்டதை உறுதி செய்தபின் இஸ்ரேல் படையினர் காசாவுக்குள் நுழைந்தனர். காசாவில் செயல்பட்டுவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினரை முற்றிலும் அழிக்கவும், பணய கைதிகளாக காசாவுக்குள் கடத்தி செல்லப்பட்டவர்களை மீட்கவும் இஸ்ரேல் படையினர் காசாவுக்குள் நுழைந்தனர்.

அதிரடி தாக்குதல்:

காசா முனைக்குள் நுழைந்த இஸ்ரேல் படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். ஹமாஸ் ஆயுதக்குழுவினரை குறிவைத்து தரைவழி, வான்வழி, கடல்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. காசா முனை மீது இஸ்ரேல் குண்டுமழை பொழிந்தது.

மேற்கு கரை மோதல்:

காசா முனையில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேல் படையினர் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் மேற்கு கரையிலும் மோதல் ஏற்பட்டது. மேற்கு கரையில் உள்ள ஆயுதக்குழுவினருக்கும் இஸ்ரேலிய படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

பலி எண்ணிக்கை:

இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான மோதலில் காசா முனையில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட இதுவரை 41 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்கு கரையில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு எதிரான போரில் இஸ்ரேலிய வீரர்கள் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

பணய கைதிகள்:

கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலில் இருந்து 251 பேரை ஹமாஸ் ஆயுதக்குழுவினர் காசா முனைக்கு பணய கைதிகளாக கடத்தி சென்றனர். இதையடுத்து, ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமாகவும் ஹமாஸ் ஆயுதக்குழுவிடம் பணய கைதிகளாக இருந்த 117 பேரை இஸ்ரேல் உயிருடன் மீட்டுள்ளது.

அதேபோல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பணய கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், இன்னும் 100க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் ஹமாஸ் வசம் பணய கைதிகளாக உள்ளனர்.

இஸ்ரேல் மீது லெபனான், சிரியா, ஈராக், ஏமனில் இருந்து தாக்குதல்:

இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் பல மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இஸ்ரேல் மீது லெபனான், சிரியா, ஈராக், ஏமனில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆதரவு குழுக்கள் தாக்குதல் நடத்தின.

ஈரானின் ஆதரவுடன் லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள், சிரியா, ஈராக்கில் செயல்பட்டு வரும் பயங்கரவாத குழுக்கள், ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

பதிலடி கொடுக்கும் இஸ்ரேல்:

காசா முனை மட்டுமின்றி லெபனான், சிரியா, ஈராக், ஏமன் என அனைத்து முனைகளில் இருந்தும் இஸ்ரேல் மீது ஈரான் ஆதரவு குழுக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் அவ்வப்போது பதிலடி கொடுத்து வருகிறது.

ஈரான் தூதரகம் மீது தாக்குதல்:

சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரான் தூதரகம் மீது கடந்த ஏப்ரல் 1ம் தேதி வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இஸ்ரேல் விமானப்படை இந்த தாக்குதலை நடத்தியதாக தகவல் வெளியானது. இந்த தாக்குதலில் ஈரான் புரட்சிப்படை மூத்த தளபதி முகமது ரிசா சகிதி, ஈரானிய புரட்சிப்படை வீரர்கள் 6 பேர், சிரியாவை சேர்ந்த 6 பேர் என மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர்.

இஸ்ரேல் மீது ஈரான் நேரடி தாக்குதல்:

சிரியாவில் உள்ள தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக ஏப்ரல் 13ம் தேதி இஸ்ரேல் மீது ஈரான் நேரடியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் மீது ஈரான் நேரடி தாக்குதல் நடத்தியது இதுவே முதல் முறையாகும்.

ஈராக், லெபனான், ஏமனில் இருந்தும் தாக்குதல்:

ஈரானுடன் சேர்ந்து ஈராக், லெபனான், ஏமனில் செயல்பட்டு வந்த ஆயுதக்குழுவுக்களும் அதேநாளில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தின.

தாக்குதல் முறியடிப்பு:

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதல் முறியடிக்கப்பட்டது. இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு ஏவுகணை, டிரோன்கள், ராக்கெட்டுகளை வானிலேயே தாக்கி அழித்தன.

ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் பலி:

அசர்பைஜானில் புதிதாக கட்டப்பட்ட அணை திறப்பு விழாவிற்கு ஈரான் அதிபராக இருந்த இப்ராகிம் ரைசி கடந்த மே 19ம் தேதி ஹெலிகாப்டரில் சென்றார்.

நிகழ்ச்சியை முடித்துவிட்டு ஈரான் திரும்பியபோது அதிபர் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் மர்மமான முறையில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி உள்பட ஹெலிகாப்டரில் பயணித்த 9 பேரும் உயிரிழந்தனர். மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டதாக ஈரான் கூறியது.

ஏமன் மீது இஸ்ரேல் குண்டு மழை:

கடந்த ஜூலை மாதம் 19ம் இஸ்ரேலின் டெல் அவிவ் நகர் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஹூடைடா துறைமுகம் மீது கடந்த ஜூலை 20ம் தேதி இஸ்ரேல் விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் சற்று குறைந்தது.

ஈரான் புதிய அதிபர் தேர்வு:

ஈரான் அதிபராக செயல்பட்டு வந்த இப்ராகிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததையடுத்து ஈரான் புதிய அதிபராக மசூத் பெசேஷ்கியான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஈரான் அதிபர் பதவியேற்பு விழாவில் ஹமாஸ் தலைவர்

ஈரான் புதிய அதிபர் மசூத் பெசேஷ்கியான் பதவியேற்பு விழா ஜூலை 30ம் தேதி நடைபெற்றது. இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவராக செயல்பட்டு வந்த இஸ்மாயில் ஹனியி பங்கேற்றார்.

இஸ்ரேலில் மீது அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பயங்ரவாத தாக்குதல் நடத்திய நிலையில் இந்த தாக்குதலுக்கு இஸ்மாயில் ஹனியி மூளையாக செயல்பட்டார்.

கத்தாரில் வசித்து வந்த ஹனியி ஈரான் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்றார். பதவியேற்பு விழாவிற்கு பின் ஈரானின் புதிய அதிபர் மசூத் பெசேஷ்கியானுடன் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியின் ஆலோசனை நடத்தினர்.

மறுநாளே ஹமாஸ் தலைவர் கொலை

ஜூலை 30ம் தேதி ஈரான் அதிபர் மசூத் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் மறுநாளே கொல்லப்பட்டார். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள வீட்டில் தங்கி இருந்த இஸ்மாயில் ஜூலை 31ம் தேதி அதிகாலை 2 மணியளவில் கொல்லப்பட்டார். அந்த வீட்டின் மீது அதிகாலை ஏவுகணை மூலம் துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக தகவல் வெளியானது.

ஹமாஸ் புதிய தலைவராக யாஹ்யா சின்வார்:

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் கொல்லப்பட்டதையடுத்து புதிய தலைவராக யாஹ்யா சின்வார் நியமிக்கப்பட்டார்.

ஹிஸ்புல்லாவை குறிவைத்து பேஜர் தாக்குதல்:

ஹமாசுக்கு ஆதரவாக லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாத குழு இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தது. இதனால், இஸ்ரேலின் வடக்கு பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறப்பட்டனார்.

இதையடுத்து, வடக்கு இஸ்ரேலில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களை மீண்டும் அதே பகுதியில் குடியமர்த்த இஸ்ரேல் திட்டமிட்டது.

இதற்காக ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் மீது தாக்குதலை தீவிரப்படுத்தியது. ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் பயன்படுத்திவந்த பேஜர்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. கடந்த மாதம் 18ம் தேதி மாலை 3 மணியளவில் லெபனான் முழுவதும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் பயன்படுத்திய தகவல் தொடர்பு கருவியான பேஜர்கள் ஒரேநேரத்தில் வெடித்து சிதறின. இந்த தாக்குதலில் 37 பேர் உயிரிழந்தனர்.

லெபனானில் குண்டு மழை:

இதனை தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் குண்டு மழை பொழிந்தது. கடந்த மாதம் 20ம் தேதி லெபனான் தலைநகர் பெரூட்டில் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன. இதில் ஹிஸ்புல்லா அமைப்பின் ராட்வின் படைப்பிரிவு தளபதி இப்ராஹிம் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.

1000 பேர் பலி:

மேலும், லெபனானில் இஸ்ரேல் தொடர்ந்து குண்டுமழை பொழிந்தது. இதில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் உள்பட 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

ஹிஸ்புல்லா தலைவர் பலி:

லெபனான் தலைநகர் பெரூட்டில் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் தலைமையிடத்தை குறிவைத்து கடந்த மாதம் 28ம் தேதி இஸ்ரேல் குண்டுமழை பொழிந்தது. இதில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான நஸ்ரல்லா கொல்லப்பட்டார்.

லெபனானில் தரைவழி தாக்குதல்:

ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டதை தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் தரைவழி தாக்குதலை தொடங்கியது. இஸ்ரேலிய படைகள் லெபனானுக்குள் நுழைந்தன. அதேவேளை, லெபனான் மீது இஸ்ரேல் விமானப்படை குண்டுமழை பொழிந்து வருகிறது.

இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் தாக்குதல்:

இஸ்ரேல் மீது ஈரான் கடந்த 2ம் தேதி மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. 181 ஏவுகணைகள் ஈரானில் இருந்து இஸ்ரேல் மீது ஏவப்பட்டன. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஹமாஸ் ஆயுதக்குழு தலைவர் இஸ்மாயில் கொல்லப்பட்டதற்கும், லெபனானில் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டதற்கும் பதிலடியாக இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் கூறியுள்ளது. இந்த தாக்குதலில் இஸ்ரேலில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. ஈரான் ஏவிய ஏவுகணைகள் பெரும்பாலும் இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்பால் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டன.

இஸ்ரேல் மீது ஈராக் தாக்குதல்:

இஸ்ரேல் மீது ஈராக்கில் இருந்து செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பயங்கரவாத அமைப்பு இன்று டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இஸ்ரேலிய வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

இஸ்ரேல் மீது தாக்குதல்: ஈரான் தலைவர் அழைப்பு

மத்திய கிழக்கில் போர் விரிவடைந்து வரும் நிலையில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி இன்று மத வழிபாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பேசிய கமேனி, கடந்த அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல், தர்க்க ரீதியான மற்றும் சட்டபூர்வமான தாக்குதல் என்று கூறினார்.

ஆப்கானிஸ்தான் முதல் ஏமன் வரை, ஈரான் முதல் காசா மற்றும் ஏமன் வரை இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகுமாறு இஸ்லாமிய நாடுகளுக்கு அயதுல்லா அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல்:

மத்திய கிழக்கில் போர் தொடர்ந்து விரிவடைந்து வரும் நிலையில் அமெரிக்காவில் அடுத்த மாதம் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றிபெறும் பட்சத்தில் மத்திய கிழக்கில் போர் முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரேலின் தீவிர ஆதரவாளர் டிரம்ப்:

இஸ்ரேலின் தீவிர ஆதரவாளரான டிரம்ப் அமெரிக்க அதிபராகும்பட்சத்தில் அவர் இஸ்ரேலுக்கு அதிக அளவில் ராணுவ உதவிகளை மேற்கொள்ளலாம். மேலும், இஸ்ரேல் மீது ஈரான் உள்ளிட்ட நாடுகள் தாக்குதல் நடத்தினால் தீவிரமான பதிலடி கொடுக்கவும் டிரம்ப் ஆதரவு அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரானுக்கு பதிலடி கொடுக்குமா இஸ்ரேல்:

இஸ்ரேல் மீது ஈரான் 2 முறை நேரடியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த இரு தாக்குதலுக்கும் இஸ்ரேல் இதுவரை ஈரான் மீது எந்தவித பதிலடி தாக்குதலும் நடத்தவில்லை. இதனால், அமெரிக்க அதிபராக டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஈரான் மீது இஸ்ரேல் நேரடி தாக்குதலை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரான் அணு உலை, கச்சா எண்ணெய் கிடங்குகள் மீது தாக்குதல்?:

ஈரானின் அணு உலை, கச்சா எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து இஸ்ரேல் விரைவில் தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர் 7 ... விரைவில் ஓராண்டு நிறைவு:

இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதனை தொடர்ந்து போர் நடைபெற்று வரும் நிலையில் வரும் திங்கட்கிழமையுடன் இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தி ஓராண்டு நிறைவடைகிறது.

அதிகரிக்கும் பதற்றம்:

ஹமாஸ் தாக்குதல் நடத்தி ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில் கடந்த ஆண்டை போன்றே மீண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என பதற்றம் அதிகரித்துள்ளது. அதேவேளை, காசா முனை, லெபனான், ஏமன், சிரியா உள்ளிட்ட நாடுகளில் செயல்பட்டு வரும் பயங்கரவாத, ஆயுதக்குழுக்களை குறிவைத்து இஸ்ரேல் இன்னும் சில நாட்களில் தாக்குதலை தீவிரப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், அக்டோபர் 7ம் தேதி நெருங்கும் நிலையில் இஸ்ரேல் மீது எதிரி நாடுகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், எதிரி நாடுகள் மீது இஸ்ரேலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

தப்பு கணக்கு போட்டுவிட்டதா ஹமாஸ்?

இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தி விரைவில் ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில் பணய கைதிகள் பரிமாற்றம் மூலம் போரை முடிவுக்கு கொண்டுவர ஹமாஸ் தீவிரம் காட்டியது.

ஆனால், நாளுக்குநாள் போர் விரிவடைந்ததையடுத்து காசா முனை, மேற்குகரையில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இன்னும் 100க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பணய கைதிகளாக உள்ள நிலையில் இஸ்ரேல் தாக்குதலில் காசா முனையில் மட்டும் 41 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த காசா முனையே நிலைகுலைந்து உள்ளது.

அக்டோபர் 7 தாக்குதல், பணய கைதிகள் சிறைபிடிப்பு மூலம் இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்களை விடுவித்து விடலாம் என்று ஹமாஸ் எண்ணிய நிலையில் ஒட்டுமொத்த காசா நகரமே பெரும் அழிவை சந்தித்துள்ளது.

போர் நிறைவடைந்து காசாவை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவருவது மிகவும் அரிதான ஒன்றாகும். போர் முடிவுக்கு வந்தாலும் காசா முனையை ஹமாஸ் இனி மீண்டும் நிர்வகிப்பது என்பது நிச்சயம் சாத்தியமற்றதாகும். காசாவை ஹமாஸ் நிர்வகிக்க இஸ்ரேல் நிச்சயம் அனுமதிக்காது என்பதே நிதர்சனமான உண்மை.

போர் முடிவுக்கு வருமா?

ஓராண்டை கடந்து மத்திய கிழக்கில் போர் நீடித்து வருகிறது. காசா முனையில் இருந்து ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பிடியில் உள்ள பணய கைதிகள் மீட்கப்படும் வரை அல்லது பணய கைதிகள் உயிரிழந்துவிட்டனர் என அறிவிக்கப்படும் வரை இஸ்ரேல் தாக்குதலை தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒப்பந்த அடிப்படையில் குறிப்பிட்ட கால அளவிற்கு போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டாலும் ஒப்பந்த கால முடிவுக்கு பின்னர் காசா முனை மீது இஸ்ரேல் தாக்குதலை தொடரலாம்.

ஈரானுக்கு நிச்சயம் பதிலடி:

ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள், காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் ஏவுகணை, ராக்கெட் தாக்குதல் நடத்திய சில மணிநேரங்கள், சில நாட்களில் அந்த அமைப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஆனால், இஸ்ரேல் மீது ஈரான் 2 முறை நேரடி ஏவுகணை தாக்குதல் நடத்தியும் அந்நாடு மீது இதுவரை இஸ்ரேல் நேரடியாக எந்த தாக்குதலையும் நடத்தவில்லை. அதேவேளை, முதலில் காசா முனை, அதனை தொடர்ந்து தற்போது லெபனான் என ஒவ்வொரு பகுதியாக இஸ்ரேல் தாக்குதலை நடத்தி வருகிறது.

அதன்படி, லெபனானில் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் ஈரான் மீது இஸ்ரேல் நிச்சயம் தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரானின் அணு உலை, எண்ணெய் கிடங்குகள், ஈரான் பாதுகாப்புத்துறை தலைவர்கள், ராணுவ தளபதிகள், அணு விஞ்ஞானிகள், பொதுமக்கள் என எந்த வகையிலாவது தாக்குதலை நடத்த இஸ்ரேல் முயற்சிக்கலாம். ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் ஈரான் உச்ச தலைவரை குறிவைத்து கூட இஸ்ரேல் விரைவில் தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மத்திய கிழக்கில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. இஸ்ரேல், ஈரான், ஹமாஸ், ஹவுதி, ஹிஸ்புல்லாவின் அடுத்தடுத்த நகர்வுகளை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Read Entire Article