பழநி: நவராத்திரி விழாவினையொட்டி பழநி மலைக்கோயிலில் அக். 12ம் தேதி 11.30 மணிக்கு நடை அடைக்கப்பட உள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் நவராத்திரி விழா, நேற்று முன்தினம் துவங்கி அக். 12ம் தேதி வரை நடைபெறுகிறது.
12ம் தேதி விஜயதசமி அன்று பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறும். மதியம் 3.15 மணிக்கு பராசக்திவேல் புறப்பட்டு சன்னதி திருக்காப்பிடப்படும். பராசக்திவேல் கோதைமங்கலம் கோதீஸ்வரர் கோயில் சென்று அம்பு போட்டு, பின் புறப்பாடாகி மலைக்கோயிலுக்கு திரும்பி வரும். அதன்பின்பு ராக்கால பூஜை நடைபெறும்.
இந்நிகழ்வுகளின் காரணமாக 12ம் தேதி காலை 11.30 மணிக்கு நடை சாத்தப்படும். அனைத்து தரிசன கட்டண சீட்டுகளும் நிறுத்தப்படும். படிப்பாதை, வின்ச், ரோப்காரில் வரும் பக்தர்கள் காலை 11 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர். மேலும் வரும் 12ம் தேதி வர தங்கரத புறப்பாடு நடைபெறாது. 13ம் தேதி மலைக்கோயிலில் வழக்கம்போல் பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவரென பழநி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
The post அக். 12ம் தேதி பழநி மலைக்கோயிலில் பகலில் நடையடைப்பு appeared first on Dinakaran.