அகோர வீரபத்திரர் அச்சம்… ஆக்ரோஷம்… அழகு!

6 hours ago 4


சிற்பமும் சிறப்பும்

ஆலயம்: திருவேங்கடமுடையான் மண்டபம், ஸ்ரீ வைகுண்டநாதப் பெருமாள் ஆலயம், ஸ்ரீ வைகுண்டம், தூத்துக்குடி மாவட்டம்.

காலம்: விஜயநகர – நாயக்கர் காலம் (பொ.ஆ.16ஆம் நூற்றாண்டு).

அகோர வீரபத்திரர்

கடினமான கருங்கற்களால் உருவாக்கப்பட்ட இந்த அச்சமூட்டும் தோற்றம் கொண்ட ‘அகோர வீரபத்திரர்’, விஜயநகர காலத்தின் சிற்பக்கலையின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்றாகும். அகோர வீரபத்திரர், சிவபெருமானின் மூன்றாவது கண்ணிலிருந்து தோன்றியவர். தட்சனின் யாகத்தில், வாள் மற்றும் கேடயத் துடன் உக்கிரமான வடிவு கொண்டு வீரபத்ரர், தட்சனை அழித்தார். அகோர வீரபத்திரரின் இந்த ஆவேசத் தோற்றம் ஒரு பிரம்மாண்ட சிற்பமாக அற்புதமாக வடிக்கப்
பட்டுள்ளது.

அவரது வலது காலில் உள்ள நரம்புகள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கத் தவறுவதில்லை. ஆபரணங்கள், உடைகள், கையில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகள், வாளைப் பிடித்திருக்கும் கை, நிற்கும் தோரணை, மிரட்டும் விழிகள், முகபாவனை, விலாப் பகுதியில் உள்ள எலும்பு, நகங்கள் மற்றும் காலில் உள்ள நரம்புகள் ஆகிய வற்றின் மூலம் சிற்பியின் நிபுணத்துவம் தெளிவாகத் தெரிகிறது.

கையின் சில பகுதிகள், வாள் உடைந்திருந்தாலும், சிற்பம் இன்னும் உயிர்ப்புடன், ஒவ்வொரு கோணத்திலும் வித்தியாசமான பார்வையைத் தருகிறது. அகோர வீரபத்திரருக்கு அருகிலேயே தாள வாத்தியம் வாசிக்கும் கந்தர்வனின் சிற்பமும் ஈர்க்கின்றது.நவ திருப்பதி மற்றும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகிய இத்தலம் பற்றி நம்மாழ்வாரின் பாசுரம்:

‘‘புளிங்குடி கிடந்தது வரகுணமங்கை இருந்து வைகுந்த்துள் நின்று
தெளிந்த என் சிந்தை அகங்கழியாதே
என்னையாள்வாய் எனக்கருளி’’
– நம்மாழ்வார்

இந்த கோயிலின் ஆரம்பகால கட்டுமானம் 8 ஆம் நூற்றாண்டில் பாண்டியர் ஆட்சியின்போதே இருந்துள்ளது. பாண்டிய மன்னன் முதலாம் ஜடாவர்மன் குலசேகரன் (பொ.ஆ.1190-1216) ஏராளமான மானியங்களைக் கோயிலுக்கு வழங்கியது பற்றிய கல்வெட்டுக்குறிப்புகள் உள்ளன. மாறவர்மன் சுந்தர பாண்டியன் (1216-1238) கோயிலை நிரந்தரமாக விளக்கெரியும் வகையில் நிவந்தங்களை வழங்கினார். வைகுண்டவல்லி சந்நதி நிறுவப்பட்டதையும் அவரது ஆட்சிக் காலக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. நான்காம் வீரபாண்டியன் (1309-1345) தமிழ் மாதமான வைகாசியில் தனது பிறந்தநாளின் போது கோயிலில் சிறப்புப் பூஜைகள் செய்ய கோயிலுக்கு நிலம் வழங்கினார்.16ஆம் நூற்றாண்டில் விஜயநகர நாயக்கர் ஆட்சியாளர்களால் இன்று நாம் காணும் தோற்றத்தில் பெரிய அளவில் புதுப்பிக்கப்பட்டது.

மது ஜெகதீஷ்

The post அகோர வீரபத்திரர் அச்சம்… ஆக்ரோஷம்… அழகு! appeared first on Dinakaran.

Read Entire Article