காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெயிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாகச் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், திங்கள்தோறும் ரூ.3500ம், மருத்துவப்படி ரூ.500ம் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. மேலும் அகவை முதிர்ந்த தமிழ்ச் சான்றோர்களுக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணச் சலுகையும் வழங்கப்படுகிறது.
உதவித் தொகை பெற்ற தமிழறிஞர்களின் மறைவுக்குப் பின்னர், அவரின் மரபுரிமையருக்கு அவர்தம் வாழ்நாள் முழுவதும் ரூ.2500 மற்றும் மருத்துவப் படி ரூ.500 தொடர்கிறது.இப்பணியில் இதுவரை 1,334 அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் பயனடைந்துள்ளனர். அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களிடமிருந்து 2024-2025ம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மகளிர் உரிமைத் தொகை, சமூகநல பாதுகாப்பு உதவித்தொகை போன்ற திட்டங்களின் வாயிலாக உதவித்தொகை அல்லது ஓய்வூதியம் பெற்று வரும் பயனாளிகள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க இயலாது. உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் விண்ணப்பப் படிவத்தினை மண்டில மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை உதவி இயக்குநர் அலுவலகத்திலேயே நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம், அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்தில் கட்டணமில்லாமல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை, காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் 31.10.2024க்குள் அளிக்க வேண்டும். நேரடியாக தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் அளிக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிலாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.