அகமதாபாத் விமான விபத்து நடந்த 38 மணி நேரத்தில் ஏர் இந்தியாவின் மற்றுமொரு ‘திக் திக்’ சம்பவம் அம்பலம்: நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்

6 hours ago 1

புதுடெல்லி: அகமதாபாத் விமான விபத்து நடந்த 38 மணி நேரத்தில் வியன்னா நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானத்தின் மற்றுமொரு ‘திக் திக்’ சம்பவம் தற்போது அம்பலமாகி உள்ளது. இந்த விமானத்தில் பயணித்த பயணிகள் நூலிழையில் உயிர் தப்பிய தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஜூன் 12ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியாவின் ஏஐ 171 விமானம் கோர விபத்துக்குள்ளான சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து நாடு மீள்வதற்குள், டாடா குழுமத்தின் கீழ் இயங்கும் ஏர் இந்தியா நிறுவனத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கடுமையான கேள்விகள் எழுந்தன.

இந்த விபத்தைத் தொடர்ந்து, விமானப் போக்குவரத்து இயக்குநரகம் கடந்த ஜூன் 17 அன்று ஏர் இந்தியா நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. அதில், சமீப காலமாக விமான பராமரிப்பு தொடர்பான சிக்கல்கள் அதிகரித்து வருவதாகவும், பொறியியல், விமான இயக்க பிரிவுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, பாதுகாப்பிற்கு மிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் கண்டிப்புடன் அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், அகமதாபாத் விபத்து நடந்த 38 மணி நேரத்திற்குள், ஏர் இந்தியாவிற்குச் சொந்தமான மற்றொரு பெரிய விமானம் பெரும் விபத்திலிருந்து நூலிழையில் தப்பியுள்ளது.

கடந்த ஜூன் 14ம் தேதி அதிகாலை 2.56 மணியளவில், டெல்லியில் இருந்து வியன்னாவுக்குப் புறப்பட்ட போயிங் 777 ரக விமானம் (ஏஐ 187), மோசமான வானிலை மற்றும் இடியுடன் கூடிய மழைக்கு மத்தியில் டேக்-ஆஃப் ஆனது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, விமானம் திணறுவதைக் குறிக்கும் ‘ஸ்டால் வார்னிங்’ மற்றும் விமானியின் கட்டுப்பாட்டுக் கருவி அதிர்ந்து எச்சரிக்கும் ‘ஸ்டிக் ஷேக்கர்’ ஆகிய அபாய எச்சரிக்கைகள் ஒலிக்கத் தொடங்கின.

மேலும், தரைக்கு அருகே விமானம் வருவதைத் தடுக்கும் தொழில்நுட்ப அமைப்பிலிருந்து ‘தரை இறங்க வேண்டாம்’ என்ற எச்சரிக்கையும் இருமுறை வந்துள்ளது. இந்த இக்கட்டான சூழலில், திடீரென சுமார் 900 அடி உயரத்தில் இருந்து விமானம் கீழ்நோக்கி இறங்கியது. அதிர்ஷ்டவசமாக, விமானிகள் சாமர்த்தியமாகச் செயல்பட்டு நிலைமையைச் சமாளித்து, விமானத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, 9 மணி நேரப் பயணத்திற்குப் பிறகு வியன்னாவில் பாதுகாப்பாகத் தரையிறக்கினர்.

இந்தச் சம்பவம் குறித்து விமானிகள் அளித்த ஆரம்பகட்ட அறிக்கையில், ‘வானிலை காரணமாக ஏற்பட்ட அதிர்வால் ‘ஸ்டிக் ஷேக்கர்’ எச்சரிக்கை வந்தது’ என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், விமானத்தின் தரவுப் பதிவுக்கருவியை ஆய்வு செய்தபோதுதான், ‘ஸ்டால் வார்னிங்’ மற்றும் 900 அடி உயரத்தில் இருந்து விமானம் கீழிறங்கியது போன்ற தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இந்த விவகாரத்தை மிகவும் ரகசிமாக எடுத்துக்கொண்டுள்ள விமான போக்குவரத்து இயக்குனரகம், உடனடியாக உயர்மட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளது. விமானத்தை இயக்கிய இரண்டு விமானிகளும் விசாரணை முடியும் வரை விமானப் பணியிலிருந்து தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், இது தொடர்பாக விளக்கம் அளிக்க ஏர் இந்தியாவின் பாதுகாப்புத் துறை தலைவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post அகமதாபாத் விமான விபத்து நடந்த 38 மணி நேரத்தில் ஏர் இந்தியாவின் மற்றுமொரு ‘திக் திக்’ சம்பவம் அம்பலம்: நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள் appeared first on Dinakaran.

Read Entire Article