
சென்னை,
தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் ஜீவா. இவர் தற்போது இயக்குனர் பா.விஜய் இயக்கத்தில் அகத்தியா என்ற படத்தில் நடித்துள்ளார். நேற்று முன்தினம் திரையரங்கில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற வருகிறது. இதில் அர்ஜுன், ராஷி கன்னா, யோகி பாபு, விடிவி கணேஷ் மற்றும் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் ஜீவா நடித்துள்ள அகத்தியா படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
சினிமாவில் கலை இயக்குனராக இருக்கும் ஜீவா, தான் அறிமுகமாகும் முதல் படத்தின் படப்பிடிப்புக்காக ஒரு பழைய பங்களாவை வாடகைக்கு எடுத்து சொந்த பணத்தை செலவு செய்து அரங்கு அமைக்கிறார். ஆனால் படப்பிடிப்பு நின்றுபோக திகைக்கிறார். பிறகு பயமுறுத்தும் உருவங்களை வைத்து பேய் பங்களாவாக அதை மாற்றி பொதுமக்களுக்கு திறந்து விடுகிறார். அதை பார்க்க வருபவர்களிடம் கட்டணம் வசூலிக்கிறார். இதில் பணம் குவிகிறது.
ஒரு கட்டத்தில் பங்காவுக்குள் சென்ற ஒரு இளைஞன் மாயமாக அரசு அதை மூடுகிறது. காணாமல் போன இளைஞனை தேடும் ஜீவாவுக்கு பங்களாவில் அமானுஷ்ய விஷயங்கள் இருப்பது தெரிய வருகிறது. 1940-களில் வாழ்ந்த சித்த மருத்துவர் அர்ஜுன் பற்றியும் அறிகிறார். அந்த காலகட்டத்தில் என்ன நடந்தது. அதற்கும் ஜீவாவுக்கும் உள்ள தொடர்பு என்ன? பேய் தடைகளை மீறி பங்களாவில் இருக்கும் மர்மத்தை அவரால் கண்டுபிடிக்க முடிந்ததா? என்பது மீதி கதை.

ஜீவாவுக்கு ஹீரோயிசத்தை வெளிப்படுத்தும் வாய்ப்பு குறைவாக இருந்தாலும் அதை தன் அனுபவ நடிப்பால் சரி செய்து விடுகிறார். அம்மாவுக்காக அவர் எதிர்கொள்ளும் ஆபத்துக்கள் நெகிழ்வு. சித்த மருத்துவராக வரும் அர்ஜுன் அந்த கதாபாத்திரமாக மாறி படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார்.
ராஷி கண்ணா காதலி வேடத்தை காதலித்து செய்திருப்பதால் குறை ஏதுமில்லை. இரண்டாவது நாயகியாக வரும் மாடில்டா அழுத்தமான நடிப்பின் மூலம் தனது தேர்வுக்கு நியாயம் கற்பித்துள்ளார். எட்வர்ட் சோனென்ப்ளிக் வில்லத்தனம் பயத்தை தருகிறது. ஷாரா, ரெடின் கிங்ஸ்லி ஆகிய இருவரும் வழக்கத்துக்கு மாறாக அடக்கி வாசித்து நல்ல பேர் வாங்குகிறார்கள். ராதாரவி, நிழல்கள் ரவி, யோகிபாபு, விடிவி கணேஷ், ரோகிணி, சார்லி உள்பட அனைவரும் கதாபாத்திரத்துக்கும் கதைக்கும் என்ன தேவையோ அதை வழங்கி இருக்கிறார்கள.
ஒளிப்பதியாளர் தீபக்குமார் கடந்த காலத்தை அழகாகவும், நிகழ் காலத்தை திகிலாகவும் படம் பிடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் என் இனிய பொன் நிலாவே ரீமிக்ஸ் பாடல் செவிக்கு விருந்து. பின்னணி இசையிலும் ஆளுமையை காண்பித்து படத்தை விறுவிறுப்பாக நகர்த்துகிறார். நீளமான கட்சிகள், லாஜிக் மீறல்கள் பலவீனம். கிளைமாக்ஸ் சண்டையில் ஹாலிவுட் தரம்.
பாரம்பரிய சித்த மருத்துவத்தின் மகத்துவத்தை மையப்படுத்தி இன்றைய டிரெண்டுக்கு ஏற்ப காமெடி, திகில், சுவாரஸ்யம், அம்மா செண்டிமென்ட் போன்றவற்றை கலந்து ஜனரஞ்சகமான பேய் படத்தை ரசிக்கும்படி கொடுத்து இயக்குனராக ஜெயித்துள்ளார் பா.விஜய்.
