அ.தி.மு.க.வில் உள்ள தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி மீது வெறுப்புடன் உள்ளனர்: அமைச்சர் ரகுபதி

3 months ago 18

சென்னை,

சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சட்டத் துறை அமைச்சர் ரகுபதி, "அ.தி.மு.க.வை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரவே பழனிசாமி படாதபாடுபட்டு வருகிறார். பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பின்னர் 11 தேர்தல்களில் அ.தி.மு.க. தோல்வி அடைந்துள்ளது. அ.தி.மு.க.வில் உள்ள தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி மீது வெறுப்புடன் உள்ளனர்.

அ.தி.மு.க. கட்சி தற்போது எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரியவில்லை. கட்சி தம்முடைய கட்டுப்பாட்டில் உள்ளதா என்பதே எடப்பாடி பழனிசாமிக்கு இப்போது பெரிய பயம். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. ஆதரவு ஓட்டுகள் கூட தி.மு.க.வின் உதய சூரியனுக்கு கிடைத்துள்ளன. வெற்றிப்பாதையில் அ.தி.மு.க.வை அழைத்து செல்ல எடப்பாடி பழனிசாமிக்கு தகுதியில்லை என்பது நிரூபணம் ஆகி உள்ளது. பா.ஜ.க. கொண்டு வரும் திட்டங்களை வெளிப்படையாக எதிர்க்கும் எடப்படி பழனிசாமி மறைமுகமாக ஆதரிப்பார் " என்று அவர் கூறினார்.

இதனையடுத்து நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ரகுபதி, " சீமான் கைது செய்யப்படாவிட்டாலும் நீதிமன்றத்தில் அவர் வழக்கை சந்தித்தாக வேண்டும். சீமான் மீதான அனைத்து புகார்களிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.

முன்னதாக திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், தேசிய பாதுகாப்பிற்கான தேவை இங்கே எதுவும் வரவில்லை. தமிழகத்தில் இந்து, முஸ்லீம்கள் பாதுகாப்பாக தான் இருக்கிறார்கள். புதிதாக யார் மத கலவரத்தை உருவாக்க நினைத்தாலும், அதற்கு நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம்.

நாங்கள் அனைவரையும் சமமாக தான் பார்க்கிறோம். முருகன் எங்களுக்கும் வேண்டியவர் தான். நாங்களும் வழிபட்டு தான் வருகிறோம். இங்கே வந்து யாரையும் ஏமாற்றி விட முடியாது. எனவே அந்த பிரச்சினையை எப்படி சமூகமாக தீர்ப்பது என்று எங்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெரியும். அவர் சுமூகமாக பேசி தீர்த்து வைப்பார் என்று அவர் பதிலளித்தார்.

இதையடுத்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்திருந்தார். இதுபற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர் திமுக ஆட்சியில் பெண்களுக்கு தைரியம் வந்திருக்கிறது. தங்களுக்கு ஏற்படும் கொடுமைகள் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தால் உரிய நீதி கிடைக்கும் என்பதை உணர்ந்துள்ளனர். அதற்கான ஆட்சி இந்த ஆட்சி என்பதை புரிந்து கொண்டு அனைவரும் முன்வருகிறார்கள். கடந்த ஆட்சியில் பொள்ளாச்சி சம்பவத்தில் 14 நாள்கள் வரை காத்திருந்தனர். அப்போது கூட முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. அ.தி.மு.க. ஆட்சி என்றால் புகாரை பதிவு செய்ய தயங்குவார்கள். ஆனால் தற்போதைய ஆட்சியில் அப்படி இல்லை. தைரியமாக பதிவு செய்வார்கள். திராவிட மாடல் ஆட்சியில் பெண்களுக்கு பலத்த பாதுகாப்பு இருக்கிறது என்ற நம்பிக்கை பிறந்துள்ளது என்று அமைச்சர் ரகுபதி கூறினார்

Read Entire Article