Digital Arrest Scam மூலம் ரூ.1 கோடி இணைய வழியில் மோசடி செய்த ராஜஸ்தான் & சண்டிகர் மாநில 2 குற்றவாளிகள் கைது

2 weeks ago 5

சென்னை: தமிழ்நாடு சைபர் குற்றப் பிரிவு மிகப்பெரிய அளவிலான Digital Arrest மோசடியில் ஈடுபட்ட இரண்டு நபர்களை அதிரடியாக கைது செய்துள்ளது. சேலத்தில் வசிக்கும் பாதிக்கபட்ட நபர் ஒருவரிடம் தாங்கள் TRAY (இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) யிலிருந்து பேசுவதாகவும், தங்கள் செல் போன் எண்ணானது பண மோசடி வழக்கில் சம்மந்தப்பட்டுள்ளதாகவும், மேலும் CBI அதிகாரிகள் பேசுவதாக சொல்லியும் தாங்கள் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க ரூ.1 கோடி பணத்தை அனுப்ப சொல்லி மிரட்டி மேற்படி பணத்தை பெற்று மோசடி செய்துள்ளனர்.

19/10/2024 அன்று. சேலத்தை சேர்ந்த பாதிக்கப்பட்டவருக்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAY) அதிகாரி என்று தொடர்பு கொண்ட மோசடிக்காரர் ஒருவர் பாதிக்கபட்டவர் பயன்படுத்தி வரும் செல் போன் எண்ணானது பண மோசடி வழக்கில் சம்மந்தப்பட்டுள்ளது அதனால் உங்கள் செல் போன் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது எனக்கூறியும். உங்கள் மேல் சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டுமெனில் CBI அதிகாரியிடம் பேசுங்கள் என அந்த அழைப்பை ஒரு போலி CBI தலைமையக அதிகாரி ஒருவருக்கு மாற்றியுள்ளார்.

அந்த போலி CBI தலைமையக அதிகாரி போலீஸ் சீருடையில் வாட்ஸ் ஆப் வீடியோ கால் மூலம் பாதிக்கபட்ட நபரிடம் உங்களை கைது செய்ய இந்திய ரிசர்வ் வங்கியின் ஆவணக்களின் படி உச்ச நீதி மன்ற அரெஸ்ட் வாரண்ட் இருப்பதாகவும், நீங்கள் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கவும், நாங்கள் உங்களை கைது செய்யாமல் இருக்கவும் உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் மொத்த பணத்தையும் நாங்கள் சொல்லும் வங்கி கணக்கிற்கு அனுப்ப வேண்டும் என்றும் அதனை நாங்கள் சரிபார்க்கும் வரை நீங்கள் எங்கள் Digital Custody-யில்தான் இருக்க வேண்டும் என்றும் வீடியோ கால் இணைப்பை தூண்டிக்க கூடாது.

இதனைபற்றி வேறு யாரிடமும் தெரிவிக்க கூடாது என்றும், இல்லையென்றால் சட்டரீதியான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டியுள்ளார். இந்த அச்சுறுத்தல்களை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர் அவர் ஏமாற்றபடுகிறோம் என்பதை தெரிந்துகொள்ளும் முன்பே மோசடிகாரர்களின் வங்கி கணக்கிற்கு ரூ.1,00,00,000/- பணத்தை அனுப்பியுள்ளார். இது ஒரு ஏமாற்று வேலை என்பதை அறிந்த பின்னர் அவர் NCRP-யில் ஆன்லைன் புகார் அளித்தும், சென்னையில் உள்ள சைபர் குற்றப் பிரிவில் நேரிலும் புகார் அளித்துள்ளார்.

இதன் அடிப்படையில், சென்னை சைபர் குற்றப் பிரிவு தலைமையகத்தில் SCCIC. குற்ற எண். 70 /2024, U/s. 318(4) 319(2) 336(3) 340(2) BNS-2023 & Sec 66D LT (Amendment)-Act-2008. 6 FIR பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் குற்றவாளிகள் சண்டிகர் மாநிலத்தில் பதுங்கியிருப்பதை கண்டுபிடித்த தமிழ்நாடு சைபர் குற்றப் பிரிவு ஒரு காவல் ஆய்வாளர் தலைமையிலான சிறப்பு தனிப்படையுடன் சண்டிகர் மாநிலம் விரைந்து சென்று சண்டிகர் மாநில சைபர் கிரைம் காவல் துறையுடன் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தி அங்கு பதுங்கியிருந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மோசடி வங்கி கணக்கு துவங்கிய பர்தீப் சிங், சண்டிகர் மாநிலத்தை சேர்ந்த யஷ்தீப் சிங் ஆகியோர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும் விசாரணையில், பர்தீப் சிங் மற்றும் யஷ்தீப் சிங் ஆகியோர் இந்த இணைய மோசடி கும்பலின் முக்கிய குற்றவாளி ஒருவரின் திட்டதின்படி மோசடிக்கான வங்கி கணக்குகளை தொடங்கி ஏமாற்று வேலை செய்து வந்துள்ளனர். மேலும் மோசடி கும்பலின் முக்கிய குற்றவாளியிடமிருந்து ஒவ்வொரு வங்கி கணக்கிற்கும் ரூ.1,00,000/- பணம் கமிஷன் பெற்று கொண்டு பர்தீப் சிங் என்பவர் அவர் பெயரில் D&D என்டர்பிரைஸ்” என்ற கம்பெனி தொடங்கி அந்த கம்பெனி பெயரில் இதுவரை 7 வங்கி கணக்குகளும் 7 SIM கார்டுகளும், யஷ்தீப் சிங் என்பவர் அவர் பெயரில் YDS லாஜிஸ்டிக்ஸ்” என்ற கம்பெனி தொடங்கி அந்த கம்பெனி பெயரில் இதுவரை 20-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளும் 20-க்கும் மேற்பட்ட SIM-கார்டுகளையும் வாங்கி அந்த முக்கிய குற்றவாளி வசம் கொடுத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த குற்றத்தில் சம்மந்தபட்ட ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பர்தீப் சிங், சண்டிகர் மாநிலத்தை சேர்ந்த யஷ்தீப் சிங் ஆகியோர்கள் சண்டிகரில் வைத்து கைது செய்யபட்டு சென்னை அழைத்து வந்து நீதிமன்ற உத்தரவுபடி சிறையில் அடைக்கபட்டனர். மேலும் மோசடிக்காரர்களின் வங்கி கணக்கிலிருந்து Rs.23,25,433.49 பணம் மீட்கப்பட்டுள்ளது. மேலும் சண்டிகர் மாநிலத்தை சேர்ந்த இந்த சைபர் கிரிமினல் நெட்வொர்க்கின் முக்கிய குற்றவாளிகளாக ஒருவர் தலைமறைவில் உள்ளார். மேலும் இவ்வழக்கில் புலன் விசாரணை மேற்கொள்ளபட்டு வருகிறது.

பொதுமக்கள் சைபர் குற்றங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க கீழ்கண்ட அறிவுரைகள் வழங்கப்படுகிறது:-
மோசடியாளர்கள் – இந்திய தொலைத்தொடர்பு துறை, CBI, சைபர் கிரைம் போலீஸ் என்று சொல்லி மோசடி செய்து வருகிறார்கள் பொதுமக்கள் இது போன்ற அழைப்புகளை அடையாளம் கண்டு அஞ்சாமல் கணினிசார் குற்றப் பிரிவு அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இது போன்ற அழைப்புகளை துண்டித்து விட்டு குறிப்பிடப்பட்ட அலுவலகத்தை தொடர்பு கொண்டு அழைப்பவரின் அடையாளத்தை உறுதி செய்யவும். தனிப்பட்ட தகவல்கள் மற்றும் நிதி சார்ந்த தகவல்களை அறிமுகமில்லாத நபர்களிடம் தொலைபேசியில் அளிக்காதீர்கள். மோசடி செய்பவர்கள் நமக்கு யோசிக்க நேரமளிக்காமல் அவசரமான சூழலில் இருப்பதாக நம்ப செய்வர். நம்பகமான நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து செயல்படவும்.

சைபர் மோசடிகள் மற்றும் அவர்களின் ஏமாற்றுத்தந்திரங்களை தொடர்ந்து அறிந்து வைத்திருங்கள். குற்றம் நடைபெறாமல் தடுக்க விழிப்புடன் இருப்பது முக்கியம். உங்கள் வங்கி மற்றும் கடனட்டை கணக்குகளில் அனுமதிக்கப்படாத பரிவர்த்தனைகள் ஏதும் உள்ளதா என தவறாமல் சரிபார்க்கவும். முக்கியமான கணக்குகளில் இரு காரணி பாதுகாப்பைப் பயன்படுத்தவும்.

மேலும், பொதுமக்கள் தங்களது வங்கிக்கணக்குகளை மற்றவர்கள் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் இது போன்ற கணக்குகள் நிதி மோசடிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. யாரேனும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

நீங்கள் இது போன்ற மோசடிக்கு ஆளாகியிருந்தால், சைபர் கிரைம் கட்டணமில்லா உதவி எண் 1930 ஐ டயல் செய்து சம்பவத்தைப் புகாரளிக்கவும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உங்களது புகாரைப் பதிவு செய்யவும்.

The post Digital Arrest Scam மூலம் ரூ.1 கோடி இணைய வழியில் மோசடி செய்த ராஜஸ்தான் & சண்டிகர் மாநில 2 குற்றவாளிகள் கைது appeared first on Dinakaran.

Read Entire Article