சென்னை: BSNL இணைய சேவையை அனைத்து அரசுப் பள்ளிகளும் பயன்படுத்த மாநிலத் திட்ட இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் அரசு உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் (ஹைடெக் லேப்) அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வகங்களில் கற்றல், கற்பித்தல் பணிக்காக 10 முதல் 20 கணினிகள் மற்றும் புரொஜெக்டர்கள் நிறுவப்பட்டுள்ளன. அவை ஒருங்கிணைந்த பிராட்பேண்ட் இணைய சேவை மூலம் இணைக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த சேவையில் இணைய வேகம் குறைவாக இருந்ததால் ஆய்வகங்களின் பயன்பாடும் குறைந்தது. இதை சரிசெய்ய அரசுப் பள்ளிகளில் 100 எம்பிபிஎஸ் வேகம் கொண்ட பிராட்பேண்ட் இணையதள சேவையை அமைத்துக் கொள்வதற்கு பள்ளிக்கல்வித் துறை அனுமதி வழங்கியது.
இதுதவிர மாநிலம் முழுவதும் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள், கணினி ஆய்வகம் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதற்காக அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகளிலும் இணையதள வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. அதற்கான தொகை பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு அனுப்பப்படும் என்றுஅரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் இணையதள இணைப்பு வசதிகளை பிஎஸ்என்எல் வாயிலாக மேற்கொள்ள வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குனருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் BSNL இணைய சேவையை அனைத்து அரசுப் பள்ளிகளும் பயன்படுத்த மாநிலத் திட்ட இயக்குனர் உத்தரவிட்டார். ஏப்ரல் 2025 முதல் SPD அலுவலகம் நேரடியாக BSNL நிறுவனத்திற்கு இணைய சேவை கட்டணத்தை வழங்கும். இணைய சேவை ஏற்படுத்தப்படாமல் இருக்கும் அனைத்து பள்ளிகளுக்கும் பிஎஸ்என்எல் வாயிலாக இணையதள வசதி ஏற்படுத்த வேண்டும். பிற இணையதள சேவை நிறுவனங்கள் மூலமாக சேவை பெற்றுள்ள அரசுப் பள்ளிகள் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் சம்க்ர சிக்ஷா திட்டத்தின் மூலம் இணையதள வசதி ஏற்பாடு செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
The post BSNL இணைய சேவையை அனைத்து அரசுப் பள்ளிகளும் பயன்படுத்த மாநிலத் திட்ட இயக்குனர் உத்தரவு..!! appeared first on Dinakaran.