சென்னை,
அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
2024-2025 ஆம் கல்வியாண்டில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் 9-ம் வகுப்பு மாணவ / மாணவியர்கள் 2024 டிசம்பர் மாதம் 14-ஆம் தேதி ( சனிக்கிழமை ) நடைபெறவுள்ள ஊரகத் திறனாய்வுத் தேர்விற்கு (TRUST) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.
* ஊரகப்பகுதியைச் சேர்ந்தஅரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2024-25 கல்வியாண்டில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர் இத்திறனாய்வுத் தேர்வு எழுதுவதற்கு தகுதி உடையவராவார்கள். இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் தேர்வரின் பெற்றோர் / பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் உள்ளது என்பதற்கு வருவாய் துறையினரிடமிருந்து வருமான சான்று பெற்று அளித்தல் வேண்டும்.
*தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவ, மாணவியர் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து தேர்வுக்கான கட்டணம் ரூ.5 , சேவைக் கட்டணம் ரூ.5 என பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பணமாக பள்ளி தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.
*தேர்விற்கு விண்ணப்பிக்க 20.11.2024 வரை என கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்குப் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்படும் 100 தேர்வர்களுக்கு (50 மாணவியர் + 50 மாணவர்) 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தொடர்ந்து படிக்கும் காலத்திற்கு படிப்புதவித் தொகை ஆண்டு தோறும் ரூ.1000 வீதம் வழங்கப்படும்.
* நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் படிக்கும் மாணவ / மாணவிகள் விண்ணப்பிக்க இயலாது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.