நாமக்கல்,
நாமக்கல் அருகே மல்லசமுத்திரத்தில் 9 குழந்தைகளை பெற்ற பெண் மீண்டும் கர்ப்பமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கருவை கலைக்க மறுத்ததால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெரிய கொல்லப்பட்டியை சேர்ந்தவர் கோபி (வயது 40). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா (35). இவர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
சங்கீதா அடுத்தடுத்து 9 குழந்தைகளை சுக பிரசவத்தில் வீட்டிலேயே பெற்று எடுத்து உள்ளார். இதில் ஒரு குழந்தை இறந்து விட்டது. ஒரு குழந்தையை தத்து கொடுத்து விட்டனர். மீதமுள்ள 7 குழந்தைகளை வளர்த்து வருகின்றனர். தற்போது சங்கீதா மீண்டும் கர்ப்பம் ஆனார். இது குறித்து தகவல் அறிந்த அவர்களது உறவினர்கள், உடல்நிலை மோசமாகி விடும் என்பதால் கர்ப்பத்தை கலைத்துவிடு என்று கூறி உள்ளனர்.
இதை தொடர்ந்து மல்லசமுத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று கருக்கலைப்பு செய்வதற்கான முதல்கட்ட சிகிச்சையை எடுத்து உள்ளார். இதற்கிடையே திடீரென மனம் மாறிய சங்கீதா, மீண்டும் மாத்திரையை எடுத்து கொள்ள மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து மல்லசமுத்திரம் வட்டார மருத்துவ அலுவலர் பிரசாந்த் போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து சங்கீதாவை போலீசார் சமரசம் செய்து, கருக்கலைப்பு செய்வதற்காக நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் அழைத்து வந்தனர். அங்கு சங்கீதா டாக்டர்களுக்கு போதுமான ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.குறிப்பாக பிரசவ வார்டுக்கு உள்ளே செல்ல மறுத்து விட்டார்.
அவரை சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் எவ்வளவோ சமரசம் செய்து பார்த்தனர். இருப்பினும் அவர் விடாப்பிடியாக இருந்து கருக்கலைப்புக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. எனவே வேறு வழியின்றி நேற்று அவரை மீண்டும் வீட்டுக்கு அனுப்பி விட்டனர்.
தற்போது சங்கீதா 2 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 9 குழந்தைகளை பெற்றெடுத்த சங்கீதா, தற்போது மீண்டும் கர்ப்பமாகி குழந்தை பெறுவதற்கு தயாராகி வருவது சுகாதாரத்துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், சங்கீதா ஏற்கனவே 9 குழந்தைகளை சுக பிரசவத்தில் வீட்டிலேயே பெற்று உள்ளார். தற்போது மீண்டும் கர்ப்பம் அடைந்து உள்ளார். அதை கலைக்க குடும்பத்தினர் மூலமாகவும், போலீசார் மூலமாகவும் கவுன்சிலிங் கொடுத்து வருகிறோம். ஆனால் அவர் ஏற்க மறுத்து வருகிறார். தொடர்ந்து அவருக்கு கவுன்சிலிங் கொடுத்து கருவை கலைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம் என்றனர்.