புதுச்சேரி, ஏப். 25: புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தை அனைத்து துறை அதிகாரிகளுடன் திடீர் ஆய்வு செய்த முதல்வர் ரங்கசாமி எஞ்சியுள்ள பணிகளை விரைந்து முடிக்கும்படி அதிரடியாக உத்தரவிட்டார்.
புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் நகராட்சி சார்பில் ராஜீவ்காந்தி அரசு புதிய பேருந்து நிலையம் இயங்கியது. மிகவும் பழமை வாய்ந்த இந்த பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ₹29.55 கோடியில் ஒருங்கிணைந்த பேருந்து முனையமாக கட்டும் பணி கடந்த 2023 ஜூன் மாதம் துவங்கியது. முதற்கட்டமாக, பேருந்து நிலைய மைய பகுதியில் தேசிய கட்டுமான கழகம் மூலமாக முனைய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்றது.
தொடர்ந்து அதே பகுதியில் பேருந்து நிலையம் இயங்கின. இதனால் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து 2024 ஜூன் 16ம் தேதி முதல் ஏஎப்டி மைதானத்திற்கு தற்காலிக பேருந்து நிலையம் மாற்றப்பட்டது. அதன்பிறகு, பேருந்து நிலைய கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெற்றது. சுமார் 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட பேருந்து நிலையத்தில் 46 பஸ்கள் நிறுத்தும் வசதியுடன் மையப்பகுதியில் போக்குவரத்து முனைய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தில் 31 கடைகள் உட்பட பல்வேறு வசதிகள் இடம் பெற்றுள்ளன. புதிய பஸ்நிலையத்தில் 85 சதவீத பணிகள் முடிந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இதற்கிடையே கடைகள் ஒதுக்கீடு பிரச்னை காரணமாக பேருந்து நிலையத்தை திறப்பதில் இழுபறி நீடித்தது. மேலும் தற்காலிக பேருந்து நிலையத்தில் போதிய அடிப்படை வசதியில்லாததால் புதிய பேருந்து நிலையத்தை உடனே திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
கடந்த மாதம் நடைபெற்ற சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரிலும் புதிய பேருந்து நிலையத்தை விரைந்து திறக்க எம்எல்ஏக்களும் வலியுறுத்தினர். அப்போது பேருந்து நிலையத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். இதனிடையே ஏப்ரல் 14ம் தேதி புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடாததால் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் புதிய பேருந்து நிலையத்தை முதல்வர் ரங்கசாமி நேற்று மதியம் திடீரென ஆய்வு செய்தார். அவருடன் தொகுதி எம்எல்ஏ நேரு மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் சென்றனர். அப்போது ராஜீவ்காந்தி அரசு பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதி உதவியுடன் புதுப்பொலிவுடன் கட்டுமான பணிகள் நிறைவடைந்தும் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்க முடியாமல் இருப்பதற்கான காரணம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அவர்களை முதல்வர் ரங்கசாமி கடிந்து கொண்டார்.
வருகிற 30ம் தேதி அல்லது மே 4ம் தேதிக்குள் புதிய பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்காக திறக்க அரசு முடிவெடுத்துள்ள விபரத்தை தெரிவித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அதற்குள் மீதமுள்ள அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது ஸ்மார்ட் சிட்டி திட்ட உயர் அதிகாரி ருத்ரகவுடு, புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி, போக்குவரத்து துறை ஆணையர் சிவகுமார், ஸ்மார்ட் சிட்டி திட்ட தொழில்நுட்ப அதிகாரி ரவிச்சந்திரன், காவல்துறை கண்காணிப்பாளர் ரகுநாயகம், மின்துறை கண்காணிப்பு பொறியாளர் கனியமுது, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் உமாபதி, சீனிவாசன், நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன் மற்றும் பொதுப்பணித்துறை, ஸ்மார்ட் சிட்டி திட்டம், காவல்துறை, நகராட்சி, மின்துறை அதிகாரிகளும் உடனிருந்தனர்.
The post 85 சதவீத பணிகள் முடிந்து 3 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டது புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில் முதல்வர் ரங்கசாமி திடீர் ஆய்வு எஞ்சிய பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு appeared first on Dinakaran.