
டெல்லி,
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது.
இதைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியது. அந்த வகையில் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மீது பாகிஸ்தான் நேற்று திடீர் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் முறியடிக்கபப்ட்டது. அதேவேளை, எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கி சண்டை நீடித்து வருகிறது. இதனால், இரு தரப்புக்கும் இடையே கிட்டத்தட்ட போர் உருவாகியுள்ளது. இரு நாடுகளும் மோதலை தவிர்க்குமாறு பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
அதேவேளை, மோதல் தொடர்பாக எக்ஸ் சமூகவலைதளத்தில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. இதில் பெரும்பாலானவை போலி , தவறான தகவல்கள் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில், தவறான தகவல்கள் பரப்பும் 8 ஆயிரம் கணக்குகளை முடக்க எக்ஸ் தளத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவையடுத்து அந்த கணக்குகளை எக்ஸ் நிறுவனம் முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.