75 நாட்களுக்கு மேலாக ஆழியார் அணை நீர் இருப்பு 115 அடியாக எட்டி உள்ளது: விவசாயிகள் மகிழ்ச்சி

3 months ago 15

பொள்ளாச்சி: ஆழியார் அணைன் நீர்மட்டம், தொடர்ந்து 75 நாட்களாக 115 அடியை எட்டியிருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் வரை மழையின்றி வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் மொத்தம் 120 அடி கொண்ட ஆழியார் அணைக்கு நீர்வரத்து மிகவும் குறைவாக இருந்தது. இதனால் பல மாதமாக அணையின் நீர்மட்டம் 65 அடிக்கும் குறைவாக இருந்தது. கோடை மழைக்கு பிறகு, ஜூன் 2வது வாரத்திலிருந்து பெய்ய துவங்கிய வடகிழக்கு பருவ மழையானது கடந்த 2 மாதமாக தொடர்ந்து பெய்தது. இதனால், ஆழியார் அணைக்கு நீர்வரத்து வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. பல நாட்கள் இரவு, பகலாக தொடர்ந்து பெய்த கனமழையால், கடந்த ஜூலை மாதம் 2வது வாரத்தில் 110அடியை எட்டியது.

அதன்பிறகும், தொடர்ந்து பெய்த கனமழையால், கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி 115 அடியை தொட்டது. பின்னர், 24ம் தேதி 118 அடியை தாண்டியதால், அணையின் பாதுகாப்பு கருதி அன்றிலிருந்து மெயின் மதகுகள் வழியாக சில நாட்கள் உபரி நீர் ஆற்றில் திறக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 2 வாரமாக மழை சற்று குறைந்து வெயிலின் தாக்கம் இருந்தது. இருப்பினும், மலை முகடு நீரோடைகள் வழியாக ஆழியார் அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்திருந்தது. இதனால், மொத்தம் அணையின் நீர் இருப்பு 75 நாட்களுக்கு மேலாக, 115 அடிக்கு மேல் நிரம்பியவாறு கடல்போல் காட்சியளிக்கிறது. நேற்றைய நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து 380 வினாடிக்கு தண்ணீர் வரத்து இருந்தது.

சுமார் 2 ஆண்டுக்கு முன்பு ஆழியார் அணையின் நீர்மட்டம் மிகவும் குறைவாக இருந்தது. இதனால், பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு கூடுதல் நாட்கள் தண்ணீர் திறப்பது தவிர்க்கப்பட்டது. ஆனால், 2 ஆண்டுக்கு பிறகு, மீண்டும் ஆழியார் அணையின் நீர்மட்டம் முழு அடியை எட்டி கடல்போல் ததும்புகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வடகிழக்கு பருவமழை வலுத்தால், அணைக்கு தண்ணீர் வரத்து மேலும் சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதுடன், பாசனத்துக்கு போதுமான தண்ணீரை சேமித்து வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்த விவசாயிகள் கூறுகையில்,‘ஆழியார் அணையிலிருந்து புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு உள்ளது. நடப்பாண்டில் பெய்த தென்மேற்கு பருவமழையால், ஜூலை மாதம் இறுதியில் அணையின் முழு அடியை எட்டியது. தொடர்ந்து சில மாதமாக அவ்வப்போது மழை பெய்வதால், 120அடி கொண்ட ஆழியார் அணையின் நீர்மட்டம் சுமார் 2 மாதமாக 118அடியாக இருந்தது. தற்போது 115 அடிக்கும் மேல் உள்ளது. கடந்த ஆண்டில் இதே நாளில் அணை நீர்மட்டம் அதிகபட்சமாக 85அடியாக உயர்ந்தது. ஆனால் நடப்பாண்டில் 75 நாட்களுக்கு மேலாக 115 அடியையும் தாண்டியிருப்பதால், வரும் நாட்களில் பாசனத்துக்கும், குடிநீருக்கும் தண்ணீர் பற்றாக்குறை இருக்காது என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது’ என்றனர்.

The post 75 நாட்களுக்கு மேலாக ஆழியார் அணை நீர் இருப்பு 115 அடியாக எட்டி உள்ளது: விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article