70 வயது ஓய்வூதியதாரர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

4 hours ago 1

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: எழுபது வயது ஓய்வூதியதாரர்களுக்கு 10 சதவிகித கூடுதல் ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தியும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் முழு மருத்துவச் செலவையும் ஏற்க வலியுறுத்தியும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஓய்வூதியதாரர்கள் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இருந்தாலும், மருத்துவச் செலவுக்கான முழுத் தொகையையும் காப்பீட்டு நிறுவனம் வழங்குவதில்லை என்று தெரிவிக்கின்றனர். உதாரணமாக நான்கு ஆண்டுகளுக்கு ஐந்து இலட்சம் ரூபாய் வரையில் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பணமில்லா சிகிச்சையை பெற்றுக் கொள்ளலாம் என்று இருந்தாலும், அனைத்து நேர்வுகளிலும் 60 விழுக்காடு முதல் 70 விழுக்காடு வரையிலான செலவினை மட்டுமே காப்பீட்டு நிறுவனம் ஏற்கிறது, மீதமுள்ள தொகையை ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் செலுத்த வேண்டிய அவல நிலை நீடிப்பதாகவும் கூறப்படுகிறது.

வயது ஆக ஆக, மருத்துவச் செலவு அதிகரித்துக் கொண்டே வருகின்ற நிலையில், 70-வயது ஓய்வூதியதாரர்களுக்கு பத்து விழுக்காடு கூடுதல் ஓய்வூதியம் வழங்கவும், வரம்பிற்கு உட்பட்டு முழு மருத்துவச் செலவையும் காப்பீட்டு நிறுவனம் ஏற்பதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

 

The post 70 வயது ஓய்வூதியதாரர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article