7 நாட்களில் உறுப்பினர் சேர்க்கை 50 லட்சத்தை கடந்தது; ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை மூலம் சாதனை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தகவல்

7 hours ago 1


சென்னை: ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை தொடங்கப்பட்டு 7 நாட்களில் 50 லட்சத்தை கடந்துள்ளது. இதில் திருச்சுழி சட்டமன்ற தொகுதி 54,310 புதிய உறுப்பினர்களை சேர்த்து முதலிடத்தை பிடித்துள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றனர். சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள ஆளுங்கட்சியான திமுக முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக நம் மண் மொழி மானம் காக்க, “ஓர­ணி­யில் தமிழ்­நாடு” எனும் மாபெரும் முன்னெடுப்பை திமுக தொடங்கியுள்ளது. இந்த ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பை திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 1ம் தேதி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து கடந்த 3ம் தேதி முதல் வீடு, வீடாக சென்று புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி தொடங்கியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இல்லம் அமைந்துள்ள ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள 3வது தெருவில் நடந்து சென்று வீடு, வீடாக உறுப்பினர் சேர்க்கை பணியை அவரே நேரடியாக மேற்கொண்டார். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். தொடர்ந்து அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், திமுக முன்னணியினர் அனைவரும் அவரவர் சொந்த வாக்குச்சாவடிகளில் இருக்கும் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு நேரில் சென்று மக்களை சந்தித்து வருகின்றனர். ஒருவர் விடாமல் அனைவர் வீட்டுக்கும் சென்று பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர்.

மக்களை சந்திக்கும் திமுகவினர் திமுக அரசின் சாதனைகளையும், திட்டங்களையும், திமுக நடத்தியுள்ள மாநில உரிமை போராட்டங்களையும் மக்களிடத்தில் எடுத்து சொல்லி வருகின்றனர். ஒவ்வொரு வாக்காளரையும் ‘‘ஓரணியில் தமிழ்நாடு’’ என்று பிரசார இயக்கத்தில் இணைத்தும் வருகின்றனர். மேலும் மக்களை நேரில் சந்திக்கும் திமுகவினர், திமுக உறுப்பினர் சேர்க்கை படிவத்தையும் வழங்கி வருகின்றனர். அந்த உறுப்பினர் சேர்க்கை படிவத்தில் 6 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு மக்கள் பதில் அளித்து வருகின்றனர். இதனை ஒரு மினி தேர்தல் பிரசாரம் போலவே திமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர். ஓரணி தமிழ்நாடு பரப்புரையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய நேரடி கட்டுப்பாட்டில் கவனித்து வருகிறார். இது தொடர்பாக தினமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாவட்ட செயலாளர்களிடம் அவர் பேசி வருகிறார்.

ஓரணியில் தமிழ்­நாடு உறுப்­பி­னர் சேர்க்கை குறித்த விவ­ரங்­களை கேட்­ட­றிந்­து வருகிறார். அவ­ரது கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளித்த நிர்­வா­கி­கள், மக்­க­ளி­டம் நல்ல ஆத­ர­வும், வர­வேற்­பும் இருப்­ப­தா­க­வும், எழுச்­சி­யு­டன் உறுப்­பி­னர் சேர்க்கை நடந்து வருவதாகவும் கூறி வருகின்றனர். திமுகவினர் ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை மக்களிடையே மிகுந்த ஆதரவை பெற்று வருகிறது. இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளம் பதிவில் கூறியிருப்பதாவது: 50 லட்சம் உறுப்பினர்களைக் கடந்து, ஓரணியில் தமிழ்நாடு மாபெரும் வெற்றியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. இன்று காலை, திருவாரூரில் தலைவர் கலைஞர் வாழ்ந்த சந்நதி தெருவில், நானும் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டேன். தமிழ்நாடு முழுவதும் எழுச்சியுடன் நடைபெற்று வரும் இந்த முன்னெடுப்பில், 54,310 புதிய உறுப்பினர்களையும் 30,975 குடும்பங்களையும் திமுகவில் இணைத்து முதலிடத்தில் முந்தியிருக்கிறது திருச்சுழி சட்டமன்றத் தொகுதி.

மாவட்ட செயலாளர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட கழக நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள்! திருச்சுழியை முந்திச் செல்ல, களத்தில் பணியாற்றும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்! உங்கள் அனைவரது உழைப்பால் நம்முடைய இலக்கை நிச்சயம் எட்டுவோம் வெற்றி விழாவில் சந்திப்போம்! இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது. உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட்டு 7 நாட்களில் 50 லட்சத்தை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஓரணியில் தமிழ்நாடு பயணம் மொத்தம் 45 நாட்கள் நடக்கிறது. ஆகஸ்ட் 15ம் தேதிக்கு பிறகு, தமிழ்நாடு முழுக்க ஓரணியில் தமிழ்நாடு நிறைவு விழாக்கள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. திமுக சார்பில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை தாண்டி உறுப்பினர் சேர்க்கை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post 7 நாட்களில் உறுப்பினர் சேர்க்கை 50 லட்சத்தை கடந்தது; ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை மூலம் சாதனை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article