
தேனி,
தேனி மாவட்டம் கம்பம் அருகே க.புதுப்பட்டியை சேர்ந்தவர் சுருளிவேல் (வயது 45). தேங்காய் வெட்டும் கூலித்தொழிலாளி. கடந்த 2023-ம் ஆண்டு இவர் ஒரு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்த 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார். இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி, தனது பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த துயரத்தை தெரிவித்தாள்.
இதுகுறித்து சிறுமியின் தாய் உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுருளிவேலை கைது செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட போக்சோ வழக்குகளுக்கான முதன்மை சிறப்பு கோர்ட்டில் நடந்தது. அரசு தரப்பில் வக்கீல் ரஷீதா ஆஜராகி வாதாடினார்.
இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிவில், சுருளிவேலுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.40 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி கணேசன் நேற்று தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து தண்டனை விதிக்கப்பட்ட சுருளிவேலை போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.