6 மாதங்களாக 100 நாள் வேலை வழங்காததை கண்டித்து மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்த கிராம பெண்கள் திடீர் தர்ணா போராட்டம்: காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

1 month ago 9

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு மனு அளிக்க வந்த செம்பரம்பாக்கம் கிராம பெண்கள், கடந்த 6 மாதங்களாக 100 நாள் வேைல வழங்காததை கண்டித்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், கலெக்டரிடம் மனு அளித்து விட்டு சென்றனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம் ஆரிய பெரும்பாக்கம் ஊராட்சி உள்ளது.

இந்த, ஊராட்சி ஆரிய பெரும்பாக்கம், துலக்கும் தண்டலம், செம்பரம்பாக்கம் ஆகிய மூன்று கிராமங்களை உள்ளன. இந்த ஊராட்சியில் ஆரிய பெரும்பாக்கம், துலுக்கும் தண்டலம் ஆகிய 2 கிராமங்களை சேர்ந்த பெண்களுக்கு மட்டும் 100 நாள் வேலை ஒதுக்கப்படுவதாகவும், செம்பரம்பாக்கத்தில் இருக்கக்கூடிய சுமார் 300க்கும் மேற்பட்ட பெண்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக முழு நாள் வேலை ஒதுக்கப்படாமலும் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரியிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று செம்பரம்பாக்கம் கிராமத்தினை சேர்ந்த பெண்களுக்கு, கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக 100 நாள் வேலை ஒதுக்கப்படவில்லை எனக்கூறி காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு, அக்கிராமத்தினை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள், மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனை சந்தித்து மனு அளிக்க வந்தனர்.அப்போது, மாவட்ட கலெக்டரை சந்திக்க வேண்டும் எனக்கூறி மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும் மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கின் அருகே அனைத்து பெண்களும் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி சுமுக உடன்பாடு எட்டப்படாதநிலையில், 5 பேர் மட்டும் மாவட்ட கலெக்டரை சந்தித்து முறையான மனுவினை அளிக்க அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, தர்ணா போராட்டத்தை கைவிட்டு, 5 பெண்கள் மட்டும், மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து, தங்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு மேலாக 100 நாள் வேலை வழங்கப்படவில்லை. எனவே, எங்களின் வாழ்வாதாரம் கருதி தங்களுக்கு தினமும் 100 நாள் வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனுவினை அளித்தனர்.

அப்போது, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பாதாக மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் உறுதியளித்தார். இதனையெடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பெண்கள் களைந்து சென்றனர். மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும் கூட்டரங்கின் அருகே 100க்கும் மேற்பட்ட பெண்கள், தரையில அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post 6 மாதங்களாக 100 நாள் வேலை வழங்காததை கண்டித்து மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்த கிராம பெண்கள் திடீர் தர்ணா போராட்டம்: காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article