6 ஊராட்சிகள் இணைகிறது நாகர்கோவில் மாநகராட்சி மீண்டும் விரிவாக்கம்

3 months ago 28

*பரிந்துரைகள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது

நாகர்கோவில் : நாகர்கோவில் மாநகராட்சியுடன் மேலும் 6 ஊராட்சிகள் இணைக்கப்படுகின்றன. இதற்கான முன்மொழிவை தமிழ்நாடு அரசுக்கு மாவட்ட நிர்வாகம் அனுப்பியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி, பத்மநாபபுரம், குளச்சல், குழித்துறை, கொல்லங்கோடு ஆகிய 4 நகராட்சிகள், 51 பேரூராட்சிகள் ஆகிய நகர்புற உள்ளாட்சி அமைப்புகளும், 95 ஊராட்சிகள், 9 ஊராட்சி ஒன்றியங்கள், ஒரு மாவட்ட ஊராட்சி ஆகிய ஊரக உள்ளாட்சி அமைப்புகளும் உள்ளன.

இதில் ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சி அமைப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கான பதவி காலம் வரும் டிசம்பர் மாதம் நிறைவு பெறுகிறது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடுத்து தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த நிலையில் மாநில தேர்தல் ஆணையம் அதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.

இந்தநிலையில் ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளை அருகில் உள்ள அமைப்புகளுடன் இணைத்தல், தரம் உயர்த்தல் தொடர்பான பரிந்துரைகளை அனுப்ப தமிழ்நாடு அரசு அறிவுரைகளை வழங்கியிருந்தது. அந்த வகையில் நாகர்கோவில் மாநகராட்சிக்கு அருகேயுள்ள ஊராட்சிகள், பேரூராட்சிகளை இணைக்க கருத்துகள் கேட்கப்பட்டன. இதற்கு ஆதரவு, எதிர்ப்பு கருத்துகள் எழுந்திருந்தன.

இந்தநிலையில் நாகர்கோவில் மாநகராட்சியில் 6 ஊராட்சிகளை இணைத்து எல்லை விரிவாக்கம் செய்ய குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பட்டியல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் புத்தேரி, திருப்பதிசாரம், பீமநகரி, தேரேகால்புதூர், கணியாகுளம், மேலசங்கரன்குழி ஆகிய 6 ஊராட்சிகள் நாகர்கோவில் மாநகராட்சியுடன் இணைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாகர்கோவில் மாநராட்சி மக்கள் தொகை 2 லட்சத்து 89 ஆயிரத்து 916 ஆகும். பரப்பளவு 63.15 சதுர கி.மீ ஆகும். இதில் 36 ஆயிரத்து 34 மக்கள் தொகை இணைவதுடன் 33.3 சதுர கி.மீ பரப்பும் இணைந்து நாகர்கோவில் மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில் மாநகராட்சியில் இருந்து 4 முதல் அதிகபட்சம் 7.30 கி.மீ தூரத்தில் தான் இணைக்கப்படுகின்ற உள்ளாட்சி அமைப்புகள் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு இணைக்கப்படுவதன் மூலம் நாகர்கோவில் மாநகராட்சி 3 லட்சத்து 25 ஆயிரத்து 950 மக்கள் தொகை கொண்டதாக மாறும். மேலும் 96.45 சதுர கி.மீ ஆக நாகர்கோவில் மாநகராட்சி எல்லை விரிவடையும்.

இதன் வாயிலாக நாகர்கோவில் மாநகராட்சி வார்டுகள் மறுவரையறை பணிகள் அடுத்த நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னதாக மீண்டும் மேற்கொள்ளப்பட வேண்டி வரும். நாகர்கோவில் மாநகராட்சியுடன் ஏற்கனவே தெங்கம்புதூர், ஆளூர் பேரூராட்சிகள், நகராட்சியாக இருந்த போது ஆசாரிபள்ளம் பேரூராட்சி, பெருவிளை, கரியமாணிக்கபுரம் ஊராட்சிகள் ஆகியன இணைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ராஜாக்கமங்கலம், தர்மபுரம் ஊராட்சிகள், கணபதிபுரம் பேரூராட்சி ஆகியன இந்த இணைப்பு பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஊராட்சிகள் இணைப்பு பரிந்துரைகள் ஏற்கப்படும் தருவாயில் குமரி மாவட்டத்தில் ஊராட்சிகள் எண்ணிக்கை 95ல் இருந்து 8 குறைக்கப்பட்டு 87 ஆக மாறும். பேரூராட்சிகள் எண்ணிக்கை 51ல் இருந்து 8 குறைக்கப்பட்டு 43 ஆக மாறும்.

புதிய நகராட்சிக்கு பரிந்துரை

திருவட்டாறு, குலசேகரம் பேரூராட்சிகளை இணைத்து புதிய நகராட்சி உருவாக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில் திருவட்டாறு பேரூராட்சி மக்கள் தொகை 18985 ஆகும். பரப்பு 6.25 சதுர கி.மீ. குலசேகரம் பேரூராட்சி மக்கள் தொகை 17,267. பரப்பு 6.50 சதுர கி.மீ ஆகும்.

நகராட்சிகளும் விரிவடைகிறது

குழித்துறை நகராட்சி: குழித்துறை நகராட்சியில் நல்லூர் பேரூராட்சி இணைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குழித்துறை நகராட்சி மக்கள் தொகை 21,307 ஆகும். 5.15 சதுர கிமீ பரப்பு கொண்டது. குழித்துறையில் இருந்து 4 கி.மீ தொலைவு, 17,989 மக்கள் தொகை, 8.7 சதுர கி.மீ பரப்பு கொண்ட நல்லூர் பேரூராட்சி இணைவதுடன் குழித்துறை நகராட்சி மக்கள் தொகை 39 ஆயிரத்து 296 ஆக உயரும். பரப்பளவு 13.85 சதுர கி.மீ ஆக விரிவடையும்.

பத்மநாபபுரம் நகராட்சி: பத்மநாபபுரம் நகராட்சியில் விலவூர், திருவிதாங்கோடு பேரூராட்சிகள், தென்கரை ஊராட்சி ஆகியன இணைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பத்மநாபபுரம் நகராட்சி மக்கள் தொகை 23.647 ஆகும். பரப்பு 6.47 சதுர கி.மீ. இதில் 14.320 மக்கள் தொகை, 22.75 சதுர பரப்பு, 3 கி.மீ தூரத்தில் உள்ள விலவூர், 18,723 மக்கள் தொகை, 11 சதுர கி.மீ பரப்பு, 3 கி.மீ தூரத்தில் உள்ள திருவிதாங்கோடு, 7349 மக்கள் தொகை, 12 சதுர கி.மீ பரப்பு கொண்ட தென்கரை ஊராட்சி இணைக்கப்படும் தருவாயில் நகராட்சி மொத்த மக்கள் தொகை 64,039 ஆகவும், பரப்பு 52.22 சதுர கி.மீ ஆகவும் உயரும்.

குளச்சல் நகராட்சி: குளச்சல் நகராட்சியில் ரீத்தாபுரம், கல்லுக்கூட்டம், மண்டைக்காடு பேரூராட்சிகள், சைமன்காலனி ஊராட்சி ஆகியன இணைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 23,227 மக்கள் தொகை, 5.18 பரப்பு கொண்ட குளச்சல் நகராட்சியில் 21,177 மக்கள் தொகை 5.64 சதுர கிமீ பரப்பு கொண்ட, 2 கிமீ தூரத்தில் உள்ள ரீத்தாபுரம், 19,093 மக்கள் தொகை, 8.2 சதுர கிமீ பரப்பு, 3 கி.மீ தூரத்தில் உள்ள கல்லுக்கூட்டம், 13,317 மக்கள் தொகை, 2.2 சதுர கி.மீ பரப்பு, 1 கி.மீ தூரத்தில் உள்ள மண்டைக்காடு ஆகியனவும், 9,836 மக்கள் தொகை, 0.50 கிமீ தூரத்தில் உள்ள சைமன்காலனி ஊராட்சி ஆகியன இணையும் போது குளச்சல் நகராட்சி மக்கள் தொகை 86,650 ஆக உயரும். மேலும் பரப்பளவு 21.72 சதுர கி.மீ ஆக விரிவடையும்.

The post 6 ஊராட்சிகள் இணைகிறது நாகர்கோவில் மாநகராட்சி மீண்டும் விரிவாக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article