50 சென்ட் நிலத்தில் அசத்தலான நாட்டுக்கோழிப் பண்ணை!

2 months ago 11

மெக்கானிக்கல் படிப்பை படித்து விட்டு, சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்த தீபக் தற்போது அவரது சொந்த ஊரில் நாட்டுக்கோழிப் பண்ணை நடத்தி வருகிறார். இதில் மாதந்தோறும் நல்ல வருமானமும் பெற்று வருகிறார். இந்திய அளவில் அழகிய பறவைகள் சரணாலயங்களில் ஒன்றாக விளங்கும் வேடந்தாங்கல் அருகில் இந்திராபுரம் கிராமத்தில் அமைந்திருக்கும் அவரது பண்ணைக்குச் சென்றோம். பல தூர தேசத்துப் பறவைகள் ஓய்வெடுக்கும் வயல், நீர்நிலைகளைக் கண்டு ரசித்தபடியே தீபக்கின் நாட்டுக்கோழி வளர்ப்பு அனுபவங்களை கேட்க ஆரம்பித்தோம். ` டிப்ளமோ மெக்கானிக்கல் படித்துவிட்டு, சென்னையில் பணிபுரிந்தேன். கொஞ்ச காலத்தில், அந்த வேலை வேண்டாம், சொந்த ஊரில் ஏதாவது தொழில் செய்யலாம் என தோன்றியது. அதன்படி எனக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தில் கால்நடை வளர்ப்பில் ஈடுபடலாம் என நினைத்து ஊருக்கு வந்தேன். ஆடு, மாடுகளை வைத்து வளர்ப்பதை விட கோழி வளர்ப்பு மிகவும் எளிது. சரியான கவனிப்பு மட்டும் இருந்தால் போதும் என்பதால் கோழி வளர்ப்பில் ஆர்வமாக ஈடுபடத் தொடங்கினேன்.

கடந்த 2018ம் ஆண்டு திருமலை வைகாபுரத்தில் இருந்து 10 சிறுவிடை நாட்டுக்கோழிக் குஞ்சுகளை வாங்கி வந்தேன். அப்போது இரண்டு மாத கோழிக்குஞ்சின் விலை ரூ.125. இரண்டு சேவல், எட்டு பெட்டைகோழிகள் என 10 கோழிகளில் இருந்து தொடங்கிய இந்தப்பண்ணையில் தாய்கோழிகள், சேவல்கள், வெடைக்கோழிகள், கோழிகுஞ்சுகள் என மொத்தம் 500க்கும் மேற்பட்ட கோழிகள் இப்போது உள்ளன. கோழிகளுக்கான கூண்டினை 1400 சதுர அடியில் அமைத்திருக்கிறேன். கூண்டினைச் சுற்றி கம்பி வலையும், மேற்பரப்பில் ரூபிங் சீட்டும் போட்டு வைத்திருக்கிறேன். சிறுவிடைக் கோழிகளைப் பொருத்தவரையில் 6 மாதத்தில் முட்டை வைக்கத் தொடங்கும். நான் நான்கு பெட்டைக் கோழிகளுக்கு ஒரு சேவல் என பராமரிக்கிறேன். அதனால் முட்டைகளும், கோழிக்குஞ்சுகளும் தரமானதாக கிடைக்கிறது. கோழிக்குஞ்சுகள் பொரிப்பதற்கு நாங்கள் அடை வைப்பது கிடையாது. அதற்கு மாற்றாக இன்குபேட்டரை பயன்படுத்துகிறோம். இதனால் அதிக கோழிக்குஞ்சுகள் கிடைக்கிறது. முட்டையிடும் பெட்டைக்கோழிகளும் முட்டையிட்டு முடித்த ஐந்தாவது நாளில் சேவலுடன் இணைந்து மீண்டும் முட்டையிடத் தொடங்கும்.

ஒரு நாளைக்கு 15 முட்டைகள் கிடைக்கிறது. இந்த முட்டைகளை இன்குபேட்டரில் வைப்பதற்கு முன்பு முட்டைகளின் மேல் தேதியை எழுதி இன்குபேட்டரில் வைப்பேன். ஒரு நாளைக்கு மூன்று முறை முட்டைகளை எடுத்து சுற்றி வைக்க வேண்டும். அப்போதுதான் முட்டைகளில் கருகூடும். இல்லையென்றால் ஒரே இடத்தில் முழு வெப்பமும் இறங்கி முட்டைகள் வீணாகிவிடும். 18வது நாளில் முட்டைகளைச் சுற்றி வைப்பதை நிறுத்திவிடுவேன். முட்டைகளில் இருந்து 21வது நாளில் கோழிக்குஞ்சுகள் வெளியே வந்துவிடும். வெளியில் வந்த கோழிக்குஞ்சுகளை அடுத்த 21 நாள் வரை 60 வாட்ஸ் லைட்டின் வெளிச்சத்தில் வைப்பேன். இதனால் கோழிக்குஞ்சுகள் நன்கு சுறுசுறுப்பாக இருக்கும்.
ஒரு நாள் கோழிகுஞ்சுகளுக்கு நன்கு அரைத்த மக்காச்சோளம், கருவாடு, கம்பு, கேழ்வரகு, அரிசி கலந்த உணவை தீவனமாக கொடுப்பேன். இந்த தீவனத்தில் மாவுச்சத்து அதிகம் இருப்பதால் கோழிக்குஞ்சுகள் ஊட்டமாக வளரும். கோழிக்குஞ்சுகளுக்கு அதிகம் நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது. அதனால் 7வது நாளில் கண்களில் எப்1 என்ற மருந்தைக் கொடுப்பேன். இதேபோல் 14வது நாளில் ஐஷ்பீடி என்ற மருந்தினைக் கண்களில் கொடுப்பேன். இதன்பின்னர் 21வது நாளில் லசோட்டா மருந்தை கோழிக்குஞ்சுகளுக்கு கண்களில் கொடுப்பேன். இந்த மூன்று மருந்துகளையும் ஒரு சொட்டு மட்டுமே கொடுப்பேன். 21வது நாள் வரை கோழிக்குஞ்சுகளுக்கு நன்கு அரைத்த, எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய தீவனத்தை மட்டுமே கொடுப்பேன்.

21வது நாளில் கோழிக்குஞ்சுகளை மேய்ச்சலில் விடத் தொடங்குவேன். இந்தக் காலகட்டத்தில் கோழிகளுக்கு அம்மை நோய் வரக்கூடும். இதனால் கோழிக்குஞ்சுகள் தீவனம் எடுக்காமல் இறக்க நேரிடும். அதனால் அம்மை வந்த கோழிகளுக்கு மஞ்சள்கொம்பை அரைத்து வேப்ப எண்ணெயோடு சேர்த்து அம்மை வந்த இடத்தில் வைப்பேன். நான் கோழிக்குஞ்சுகளுக்கு தடுப்பூசி போடுவது கிடையாது. தீவனத்தின் மூலம் மட்டும் கிடைக்கக்கூடிய எதிர்ப்பு சக்திதான் என்னுடைய கோழிகள் தரமாக இருப்பதற்கு காரணம். மேய்ச்சலில் இருக்கும் கோழிகளுக்கு வாழை மரத்தை வெட்டி வந்து போடுவேன். இதனைக் கோழிகள் நன்கு விரும்பி சாப்பிடும். அதேபோல் வாரம் இருமுறை அருகில் இருக்கும் மீன்கடைகளுக்கு சென்று மீன் கழிசலை வாங்கி வந்து அதோடு மஞ்சள் கலந்து கோழிகளுக்கு தீவனமாக கொடுப்பேன். இதுபோக பப்பாளி, வெள்ளைப்பூசணி, மார்க்கெட்டில் அழுகி தூக்கி எறியக்கூடிய தக்காளிப் பழங்கள், வாழைப்பழங்கள், வாழைத்தண்டுகள் உள்ளிட்டவற்றையும் கோழிகளுக்கு தீவனமாக கொடுப்பேன். இவை அனைத்துமே கோழிகளுக்கு நல்ல எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். என்னுடைய நிலத்தில் ஆங்காங்கே வளர்ந்து கிடக்கும் சிறுகீரை, மணத்தக்காளி போன்ற கீரைகளையும் கோழிகளுக்கு தீவனமாக கொடுப்பேன்.

நொச்சி, பப்பாளி இலை, எலுமிச்சை தோல் உள்ளிட்டவற்றை சுடுதண்ணீரில் கொதிக்க வைத்து கோழிகளுக்கு தண்ணீராக கொடுப்பேன். இவற்றை சுழற்சி முறையில் தருவேன். கோழிகளைக் கொல்லும் நோய் என்றால் அது கழிச்சல் நோய்தான். இதனைக் கட்டுப்படுத்த அருகில் கிடைக்கும் குப்பைமேனி தழை, கீழாநெல்லி தழையே போதுமானது. இதோடு வெற்றிலை, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம் ஆகியவற்றை அரைத்து தண்ணீரில் கலந்து நன்கு கொதிக்க வைத்து கொடுத்து வந்தால் கோழிகளுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கழிசலால் பாதிக்கப்பட்ட கோழிகளுக்கு அரைத்து வைத்துள்ள இந்த கலவையை உருண்டை பிடித்து கொடுப்பேன். ஒரு நாளைக்கு இரண்டு முறை வீதம் மூன்று நாட்களுக்கு கொடுத்தால் கோழிகளுக்கு கழிச்சல் நோய் வராது, கழிச்சல் நோய் வந்த கோழியும் குணமடையும். முட்டை வைக்கக்கூடிய கோழிகளுக்கு கால்சியம் பிரச்னை வரும். இதனை சரி செய்ய கணவா ஓடு, முட்டை ஒடு உள்ளிட்டவற்றை தீவனத்தில் கலந்து கொடுப்பேன்.

ஒரு மாதத்திற்கு சராசரியாக 400 முட்டைகள் கிடைக்கும். இதில் 300 முட்டைகளை இன்குபேட்டரில் வைத்துவிடுவேன். 100 முட்டைகளை வெளியில் விற்பனை செய்துவிடுவேன். ஒரு நாட்டுக்கோழி முட்டை ரூ.15க்கு விற்பனையாகிறது. இதன்மூலம் ஒரு மாதத்திற்கு ரூ.1500 கிடைக்கிறது. இதேபோல ஒரு மாதத்திற்கு 100 கோழிக்குஞ்சுகளை விற்பனை செய்வேன். ஒரு கோழிக்குஞ்சினை ரூ.45க்கு வாடிக்கையாளர்கள் வாங்கி செல்கிறார்கள். இதன்மூலம் ரூ.4500 கிடைக்கிறது. சராசரியாக 200 நாட்டுக்கோழிகளை விற்பனை செய்கிறேன். சில கோழிகள் 900 கிராம் எடை இருக்கும். சில கோழிகள் 1.3 கிலோ இருக்கும். ஆகவே கோழியை எடை கணக்கில் விற்பனை செய்கிறேன். ஒரு கிலோ நாட்டுக்கோழியை ரூ.350க்கு விற்பனை செய்கிறேன். இதன்மூலம் சராசரியாக ரூ.78 ஆயிரம் கிடைக்கும். ஒரு மாதத்தில் முட்டை, கோழிக்குஞ்சு, கோழி ஆகியவற்றின் மூலம் ரூ.84 ஆயிரம் வருமானமாக கிடைக்கிறது. தீவனச்செலவு ரூ.30 ஆயிரம் போக ரூ.54 ஆயிரம் லாபமாக கிடைக்கிறது. சென்னையில் இருப்பவர்களுக்கு நானே நேரடியாக சென்று கோழிகளை விற்பனை செய்கிறேன்’’ என்கிறார்.
தொடர்புக்கு:
தீபக்: 97511 16539

The post 50 சென்ட் நிலத்தில் அசத்தலான நாட்டுக்கோழிப் பண்ணை! appeared first on Dinakaran.

Read Entire Article