50% கூடுதல் வரி விதித்த அமெரிக்காவுக்கு பதிலடியாக 84% ஆக வரியை கூட்டிய சீனா: தீவிரமானது வர்த்தக யுத்தம்

1 week ago 5

பாங்காக்: அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த 2ம் தேதி பரஸ்பர வரி விதித்து வர்த்தக யுத்தத்தை தொடங்கி வைத்தார். இதனால் பல நாடுகளிலும் பங்குச்சந்தைகள் வீழ்ச்சி அடைந்துள்ளன. உலக பொருளாதார ஸ்திரத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. இந்த பரஸ்பர வரியிலிருந்து தப்பிக்க இந்தியா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவுடன் போட்டி போட்டிக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. ஆனால் சீனா மட்டும் அமெரிக்காவுக்கு அடங்காமல் பதிலுக்கு பதில் வரிவிதித்து வருகிறது.

சீனாவுக்கு 34% கூடுதல் பரஸ்பர வரி விதித்ததற்காக அமெரிக்காவின் அனைத்து இறக்குமதி பொருட்களுக்கும் 34% வரியை விதிப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்த சீன அரசு அரிய வகை கனிமங்கள் ஏற்றுமதி உள்ளிட்டவைகளுக்கு கட்டுப்பாடும் விதித்தது.

இதனால் ஆத்திரமடைந்த அதிபர் டிரம்ப் 24 மணி நேரத்தில் சீனா தனது வரியை வாபஸ் பெறாவிட்டால் மேலும் 50% வரி விதிப்பதாக கூறினார். நேற்றுடன் இந்த கெடு முடிந்த நிலையில் சீனா மீது மேலும் 50% வரியை அவர் அறிவித்தார். இதனால் சீனா இறக்குமதி பொருட்கள் மீதான மொத்த வரி 104% அதிகரித்தது. இதற்கும் அசராத சீனா, மேலும் 50% சதவீத வரியுடன் அமெரிக்க பொருட்கள் மீதான வரியை 84% ஆக அதிகரிப்பதாக நேற்று அறிவித்தது. இதுதவிர அமெரிக்க ராணுவத்திற்காக பணிபுரியும் 2 நிறுவனங்கள் உட்பட 11 நிறுவனங்களுக்கு இரட்டை பயன்பாட்டு பொருட்களை விற்க சீனா தடை விதித்துள்ளது.

அமெரிக்கா உடனான வர்த்தகம் தொடர்பாக சீன வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில், ‘அமெரிக்கா தனது பொருளாதார மற்றும் வர்த்தக கட்டுப்பாடுகளை தீவிரமாக்கினால் சீனாவும் பதிலுக்கு செய்யும். எங்களாலும் எதுவும் முடியும். இறுதி வரை நாங்களும் பதிலடி தருவோம். அமெரிக்கா வரிகளை உயர்த்தினால் அதன் பிரச்னைகள் தீராது என்பதை வரலாறும், புள்ளிவிவரங்களும் சுட்டிக் காட்டுகின்றன.

பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே எதற்கும் தீர்வு காண முடியும் என்பதை அமெரிக்கா புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு பதிலாக வர்த்தக யுத்தத்தை தீவிரமாக்கினால் நிதிச் சந்தையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி அமெரிக்காவில் பணவீக்க அழுத்தத்தை அதிகரித்து பொருளாதார நெருக்கடியை உண்டாக்கும். இது அமெரிக்காவுக்கே ஆபத்தாக மாறும்’ என எச்சரிக்கப்பட்டுள்ளது.

The post 50% கூடுதல் வரி விதித்த அமெரிக்காவுக்கு பதிலடியாக 84% ஆக வரியை கூட்டிய சீனா: தீவிரமானது வர்த்தக யுத்தம் appeared first on Dinakaran.

Read Entire Article