*ராதாபுரம் கால்வாய் சீரமைப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
ராதாபுரம் : ராதாபுரம் கால்வாய் பாசனத்தால் பயன்பெறும் கடைமடை குளமான மகேந்திரபுரம் குளத்திற்கு சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் தண்ணீர் வரத்து காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க, கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிபாறை, பெருஞ்சாணி, சிற்றார்1 மற்றும் சிற்றார்2 அணைகளில் இருந்து கோதையாறு பாசனத்திட்டத்தின் கீழ் உள்ள நெல்லை மாவட்டம், ராதாபுரம் கால்வாய்க்கு பாசனத்திற்கு கடந்த 16ம் தேதி முதல் வரும் அக்டோபர் 31ம் தேதி வரை 138 நாட்களுக்கு வினாடிக்கு 150 கன அடிக்கு மிகாமல், தேவைக்கேற்ப தண்ணீர் இருப்பை பொறுத்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு, தாமிரபரணி வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளர்(நீர்வளத்துறை) சிவகுமார், கோதையாறு வடிநில கோட்டம் செயற்பொறியாளர் வசந்தி ஆகியோர் முன்னிலையில் ஏற்கனவே தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இத்தண்ணீர் திறப்பு மூலம் ராதாபுரம் கால்வாய்க்கு உட்பட்ட 17 ஆயிரம் ஏக்கர் பாசனப் பரப்பு பயன்பெறும். இக்கால்வாய் மூலம் 52 குளங்கள் பயன்பெற உள்ளன.
தற்போது ராதாபுரம் கால்வாய் தண்ணீர் ஆனது கடைமடை குளமான மகேந்திர குளத்தை எட்டியுள்ளது. கால்வாய் தண்ணீர் திறந்த குறைந்த காலத்தில் கடைமடை குளத்தை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மகேந்திரபுரம் குளத்திற்கு தண்ணீர் வந்ததால் அப்பகுதி விவசாய நிலங்களில் இந்த ஆண்டு நல்ல விளைச்சல் ஏற்படும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
The post 50 ஆண்டுகளுக்குப்பிறகு மகேந்திரபுரம் குளத்திற்கு ஜூன் மாதத்தில் தண்ணீர் வரத்து appeared first on Dinakaran.