மதுரை,
மதுரை திருநகரை சேர்ந்த வினோத்குமார் என்பவரின் 5 வயது பெண் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால், சிகிச்சைக்காக அந்த குழந்தையின் பாட்டி செல்வி, அரசரடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது, வடமாநில இளைஞர் ஒருவர் குழந்தையை நோட்டமிட்டு பின்னால் வந்துள்ளார். பின்னர் பாட்டி இல்லாத நேரத்தில் குழந்தையை தூக்கிக்கொண்டு, மருத்துவமனைக்கு வெளியே நின்ற ஆட்டோவில் ஏறி தப்ப முயன்றார்.
ஆனால் அப்போது குழந்தை கூச்சலிட்டதால் ஆட்டோ ஓட்டுநர் சுதாரித்துக்கொண்டு, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வடநாட்டு இளைஞரை மடக்கிப் பிடித்தார். இது குறித்து தகவலறிந்து உடனடியாக அங்கு வந்த போலீசார் குழந்தையை மீட்டு, பாட்டியிடம் ஒப்படைத்தனர். பின்னர் வடநாட்டு இளைஞரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.