5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் துறைமுக நகரில் ‘டைடல் பார்க்’: தொழில் தொடங்க நிறுவனங்கள் போட்டி

4 weeks ago 5

* முதல்வர் விரைவில் திறக்கிறார், அமைச்சர் நேரில் ஆய்வு

தகவல் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. முன்பு தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் பெங்களூரு, சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமே அமைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 2ம் நிலை நகரங்களுக்கும் விரிவடைந்து வருகிறது. தமிழ்நாட்டின் ஐடி சேவை துறை தொடர்ந்து வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், இத்துறையினை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அரசு டைடல் பார்க் வாயிலாக புரட்சி மேற்கொண்டுள்ளது.

மாநிலம் முழுவதும் இருக்கும் படித்த பட்டதாரிகள் ஐடி துறையில் பணியாற்றுவதில் ஆர்வமாக இருப்பது மட்டும் அல்லாமல் அதற்கான திறனையும் வளர்த்து கொள்ளத் தயாராக உள்ளனர். இதேவேளையில் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களும் 2ம் மற்றும் 3ம் நிலையிலான தமிழக நகரங்களில் தங்கள் அலுவலகங்களை திறக்க தயாராகி வருகின்றன. படித்த இளைஞர்களையும் இந்த நிறுவனங்களையும் இணைக்கும் பாலமாக தமிழ்நாடு அரசு, டைடல் நியோ என்ற மினி ஐடி பூங்காக்களை தமிழகத்தின் சிறிய நகரங்களில் உருவாக்கத் துவங்கியுள்ளது.

இதன் மூலம் சிறிய நகரங்களில் ஐடி நிறுவனங்கள் வேகமாகவே காலூன்றி வருகின்றன. அதன்படி, தென் தமிழ்நாட்டில் துறைமுக நகரமாக திகழும் தூத்துக்குடியில், தூத்துக்குடி -திருச்செந்தூர் ரோட்டில் எம்ஜிஆர் நகர் எக்ஸ்டன்சன் ஏரியாவில் டைடல் நியோ பார்க் அமைக்க கடந்த 2023 மே மாதம் முதல்வர் முக.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதனை தொடர்ந்து இதன் கட்டுமானப்பணிகள் துரிதகதியில் நடந்து முடிந்துள்ளது. விரைவில் 4 வழிச்சாலையாக மாற இருக்கும் இந்த பகுதியில், துறைமுக 6 வழிச்சாலையையொட்டி இந்த டைடல் நியோ பார்க் அமைக்கப்பட்டுள்ளது.

சுமார் ரூ.32.5 கோடி மதிப்பில் 4.16 ஏக்கர் பரப்பளவில், 63 ஆயிரத்து 100 சதுர அடிஅளவில் டைடல் நியோ பார்க் உருவாகி உள்ளது. இங்கு ஐடி மற்றும் அதனை சார்ந்து இயங்கும் நிறுவனங்கள் அமைய வசதியாக தடையற்ற மின்வசதி, வெகு வேகமான இணைய இணைப்பு வசதி, அலுவலகங்கள், குளிர்சாதன வசதிகள் கொண்ட அலுவலக அறைகள், மீட்டிங் ஹால்கள், நிர்வாக அலுவலகங்கள், பயோ மெட்ரிக் சிஸ்டம், பணியாளர்கள் ஓய்வறை, உணவு அருந்த வசதியாக டைனிங் ஹால்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கொண்டவையாக உருவாகியுள்ளது.

மேலும் தரை மற்றும் 4 தளத்துடன் கூடிய இந்த டைடல் நியோ பார்க் 16 பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஐடி நிறுவனங்கள் அமைக்க ஏதுவாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஒரே நேரத்தில் 117 கார்கள், 237 பைக்குகள் நிறுத்தி வைக்க முடியும். இங்கு தொழில் தொடங்க தற்போது 3 ஐடி நிறுவனங்கள் தயாராகி வருகிறது. மேலும் இரு நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. இங்கு 7 அல்லது 8 நிறுவனங்கள் அமைய இருக்கின்றன.

அனைத்து நிறுவனங்களும் அமையும் பட்சத்தில் இந்த டைடல் நியோ பார்க் மூலம் தூத்துக்குடி மட்டுமல்லாது குமரி, நெல்லை, தென்காசி மாவட்ட இளைஞர்களுக்கு உள்ளூரிலேயே வேலைவாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் 4 மாவட்டங்களையும் சேர்ந்த 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டைடல் பார்கை விரைவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இந்நிலையில், இந்த பூங்காவை தொழில் துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

* தூத்துக்குடிக்கு விரைவில் பெரிய திட்டம் முதலீடுகள் ஈர்ப்பதில் தமிழகம் வெளிநாடுகளுடன்தான் போட்டி: அமைச்சர் டிஆர்பி ராஜா

அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கூறுகையில், ‘தொழில் வளர்ச்சியை தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பரவலாக்க வேண்டும் என்பதற்காக அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா காலக்கட்டத்திற்கு பின்னர் தொழில்நுட்பப் பிரிவு பணிகள் வீட்டில் இருந்தே வேலை என்ற நிலைக்கு வந்துள்ளன. பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் தங்கள் சொந்த ஊரிலேயே வேலை செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர்.

இதற்காக டைடல் நியோ பார்க் தமிழகத்தின் பல இடங்களில் தொடங்கப்படுகிறது. அதன்படி தூத்துக்குடியில் தொடங்கப்பட்டுள்ள இப்பணி நிறைவடைந்துள்ளது. இதில் 11 நிறுவனங்கள் வரவுள்ளன. இதற்கான தேர்வுகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார். தென் தமிழகத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சியை கொடுக்க வேண்டும் என்பதற்காக, உலக முதலீட்டாளர் மாநாட்டில் பல்வேறு நிறுவனங்கள் தொழில் தொடங்க கையெழுத்திட்டு உள்ளன. தூத்துக்குடிக்கு வின்பாஸ்ட் போன்று, பல்வேறு பெரிய தொழில் நிறுவனங்கள் வரவுள்ளன. குறிப்பாக தூத்துக்குடிக்கு பெரிய திட்டம் ஒன்று வரப்போகிறது.

இதற்காக இரு நாடுகளிடம் போட்டியிட்டுக் கொண்டிருக்கிறோம். இதனை விரைவில் முதல்வர் அறிவிப்பார். தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் மாநிலங்களைத் தாண்டி, வெளிநாடுகளுடன்தான் போட்டியிடுகிறோம். வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்குவார்களா என்று ஆராய்ந்து அதன் பிறகே தொழில் தொடங்க ஒப்பந்தம் கையெழுத்திடப்படுகிறது. எனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் தொழில் தொடங்குவதற்கு தனியாக குழு அமைக்கப்பட்டு தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது, என்றார்.

The post 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் துறைமுக நகரில் ‘டைடல் பார்க்’: தொழில் தொடங்க நிறுவனங்கள் போட்டி appeared first on Dinakaran.

Read Entire Article