* தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்
* அடாரி, வாகா எல்லை மூடல்
* சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்திைவப்பு
ஸ்ரீநகர்: காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் உட்பட 26 அப்பாவி பொதுமக்களை சுட்டுக் கொன்ற 3 தீவிரவாதிகளின் வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பதால், இத்தாக்குதலில் பாகிஸ்தான் சம்மந்தப்பட்டிருப்பது உறுதியாகி உள்ளது. அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் நடந்த பாதுகாப்பு அமைச்சரவை கூட்டத்தில், பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் வெளியேறவும், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் அடுத்த 48 மணி நேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அட்டாரி-வாகா எல்லை மூடப்பட்டுள்ளது. இது இந்தியா-பாகிஸ்தான் இடையேயான விரிசலை மேலும் அதிகரித்துள்ளது. காஷ்மீரில் முக்கியமான சுற்றுலா பகுதிகளில் ஒன்றான பஹல்காம் மாவட்டத்தின் பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று முன்தினம் மாலை சுற்றுலா பயணிகள் இயற்கையை ரசித்துக் கொண்டிருந்த சமயத்தில் தீவிரவாதிகள் சிலர் திடீர் தாக்குதல் நடத்தினர்.
பைன் மரக் காடுகள் வழியாக பயங்கர ஆயுதங்களுடன் ஊடுருவிய தீவிரவாதிகள், சுற்றுலா பயணிகளை பிடித்து அவர்களின் பெயரை கேட்டு கொடூரமாக சுட்டுக் கொன்றனர். இதில், 26 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள். இவர்கள் 14 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். நேபாளத்தை சேர்ந்த ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதுதவிர 20 பேர் காயமடைந்தனர். இந்த கொடூர தாக்குதல் இந்தியாவையே உலுக்கி உள்ளது. இத்தாக்குதலைத் தொடர்ந்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாக டெல்லியிலிருந்து புறப்பட்டு காஷ்மீர் சென்றார்.
சவுதி அரேபியா பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு பிரதமர் மோடி நேற்று முன்தினம் இரவு இந்தியா புறப்பட்டார். பெரு நாட்டிற்கு சென்ற ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் பாதியிலேயே பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார். இந்த தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பாவின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டன்ட் படை (டிஆர்எப்) பொறுப்பேற்றுள்ளது. காஷ்மீரில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் இது. இதற்கு காரணமானவர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இந்தியா முழுவதும் குரல்கள் எழுந்துள்ளன.
இதைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணையில் களமிறக்கப்பட்டுள்ளனர். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சம்பவ இடத்தை நேற்று நேரில் ஆய்வு செய்தார். சவுதியில் இருந்து காலையில் பிரதமர் மோடி டெல்லி வந்ததும், அவரை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் சந்தித்து தாக்குதல் சம்பவம் குறித்து விளக்கம் அளித்தனர். அதைத் தொடர்ந்து மாலையில் பிரதமர் மோடியின் இல்லத்தில் அவரது தலைமையில் பாதுகாப்பு அமைச்சரவை ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில் அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், அஜித் தோவல் ஆகியோர் பங்கேற்றனர். இதில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தான் சம்மந்தப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. எனவே, பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி தலைமையில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் சம்பவத்தில் இருந்து தப்பிய சுற்றுலா பயணிகள் அளித்த தகவல்கள் மற்றும் அடையாளங்களின் அடிப்படையில் 3 தீவிரவாதிகளின் வரைபடங்களை பாதுகாப்பு படை வெளியிட்டுள்ளது.
அவர்கள் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் என்பது உறுதியாகி உள்ளது. அவர்கள் குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ.20 லட்சம் பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நாசவேலையின் பின்னணியில் பாகிஸ்தான் சம்மந்தப்பட்டிருப்பதால் பாதுகாப்பு அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, பாகிஸ்தான் உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டவர்களுக்கு விசா வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சார்க் விசா திட்டத்தின் கீழ் பாகிஸ்தான் நாட்டவர்கள் இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே விசா பெற்று இந்தியாவில் தங்கி உள்ள பாகிஸ்தானியர்கள் அடுத்த 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் எண்ணிக்கை 55இல் இருந்து 30 ஆக குறைப்பு. மீதமுள்ள தூதரக அதிகாரிகள் அனைவரும் நாட்டை விட்டு வரும் மே 1 ஆம் தேதிக்குள் வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் எண்ணிக்கையும் குறைக்கப்படும். பாகிஸ்தானுடனான அட்டாரி-வாகா எல்லை மூடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகளை வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி டெல்லியில் நேற்று இரவு வெளியிட்டார்.
ஏற்கனவே கடந்த 2019ல் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவு சீர்குலைந்துள்ள நிலையில், தற்போது பாகிஸ்தானுடனான உறவை முற்றிலும் முறித்துக் கொள்ளும் வகையில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுதவிர, பஹல்காம் தாக்குதல் தீவிரவாதிகளை தேடும் பணி காஷ்மீர் முழுவதும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதிகளில் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது. குல்காமில் தனிமார்க் பகுதியில் எல்லை தாண்டி ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சண்டை நடத்தினர். கடந்த 2019ல் புல்வாமா தீவிரவாத தாக்குதலின் போது இந்தியா எல்லை தாண்டி சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியது. இதே போல இந்தியாவுக்கு எதிராக யார் நாசவேலை செய்தால் எல்லை தாண்டி தாக்குதல் நடத்த அஞ்ச மாட்டோம் என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஏற்கனவே எச்சரித்திருந்தார். எனவே, இம்முறையும் இந்த விவகாரத்தில் எல்லை தாண்டிய நடவடிக்கை எடுக்கப்படுமா என எதிர்பார்க்கப்படுவதால் கடும் பதற்றம் நிலவுகிறது.
* இன்று அனைத்து கட்சி கூட்டம்?
ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இந்நிலையில் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வௌியாகி உள்ளது. இதுகுறித்து அமித் ஷா,ராஜ்நாத் சிங் ஆகியோர் பல்வேறு கட்சி தலைவர்களுடன் பேசி வருகின்றனர். இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* எதற்கும் நாங்கள் தயார்
பஹல்காம் சம்பவத்தில் எந்த விதத்திலும் தாங்கள் சம்மந்தப்படவில்லை என பாகிஸ்தான் திட்டவட்டமாக கூறி உள்ளது. மேலும், தீவிரவாத தாக்குதலில் பலியான மக்களுக்கு தனது இரங்கலையும் தெரிவித்துள்ளது. அதே சமயம், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் தகவல் அமைச்சர் அஸ்மா போகாரி நேற்று அளித்த பேட்டியில், ‘‘தவறான சாக்குபோக்கு சொல்லி இந்தியா எந்தவொரு தவறான சாகசமும் நடத்தினால் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். கடந்த முறை நாங்கள் தேநீர் பரிமாறினோம். இம்முறை அவ்வவளவு மரியாதையாக நடத்த மாட்டோம்’’ என கூறி உள்ளார்.
* அமித்ஷா பதவி விலக வேண்டும்
திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் குணால் கோஷ் அளித்த பேட்டியில், ‘‘நாட்டின் உள்துறை அமைச்சர் என்ற முறையில் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பு அமித்ஷாவுக்கு உள்ளது. இது மிகப்பெரிய மன்னிக்க முடியாத பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை தோல்வி. இதற்கு பொறுப்பேற்று அமித்ஷா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்’’ என்றார்.
* டெல்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, முக்கிய தலைவர்கள் வசிக்கக் கூடிய தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா தலங்கள், எல்லை சோதனைச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து வாகனங்களும் முழுமையாக பரிசோதிக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன. முக்கிய தலைவர்கள் வசிக்கும் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதே போல, இந்தியா-நேபாள எல்லையான உபியின் மகாராஜ்கஞ்ச் பகுதியிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
* காங்கிரஸ் காரிய கமிட்டி இன்று அவசர கூட்டம்
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இவ்விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த காங்கிரஸ் காரிய கமிட்டி, டெல்லியில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று காலை 11 மணிக்கு அவசரமாக கூட இருப்பதாக கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். முன்னதாக அவர் ஸ்ரீநகர் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த 26 பேரின் உடல்களுக்கு மரியாதை செலுத்தினார்.
* பிரதமரின் கான்பூர் பயணம் ரத்து
பிரதமர் மோடி ரூ.20 ஆயிரம் கோடி வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க இன்று கான்பூர் செல்வதாக இருந்தது. இப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கான்பூரைச் சேர்ந்த சுபம் திவிவேதி என்ற இளைஞரும் பஹல்காம் தாக்குதலில் பலியாகி இருப்பதால் அவரது குடும்பத்தினரின் சோகத்தில் பங்கேற்கும் வகையில் பிரதமரின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே சமயம், இன்று பீகாரின் மதுபானியில் நடக்கும் வேறொரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
* பலியானோருக்கு ரூ.10 லட்சம் நிதி
பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், படுகாயமடைந்தோருக்கு தலா ரூ.2 லட்சமும் சிறு காயமடைந்தோருக்கு தலா ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என ஜம்மு காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது. அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எவ்வளவு விலை கொடுத்தும் ஈடு செய்ய முடியாது என்றாலும் இந்த நிதி அரசின் ஆதரவுக்கான அடையாளமாக தரப்படுவதாக கூறிய காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, பலியானோர் உடல்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
* 3 தீவிரவாதிகளின் வரைபடம் வெளியீடு
பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டதாக 3 பேரின் வரைபடங்களை பாதுகாப்பு படை வெளியிட்டுள்ளது. தாக்குதலில் உயிர் தப்பியவர்கள் தீவிரவாதிகள் குறித்த தந்த தகவல்கள், அடையாளங்களின்படி இந்த வரைபடங்கள் வரையப்பட்டுள்ளன. இவர்கள் 3 பேரும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்களின் பெயர் ஆசிப் பவுஜி, சுலேமன் ஷா, அபு தல்ஹா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், மூசா, யூனஸ், ஆசிப் என்ற அடையாளப் பெயர்களையும் இவர்கள் பயன்படுத்தி உள்ளனர். பூஞ்ச் பகுதியில் நடந்த தீவிரவாத சம்பவங்களிலும் இவர்களுக்கு தொடர்பு உள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு லஷ்கர் இ தொய்பாவின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் படை (டிஆர்எப்) பொறுப்பேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
* தீவிரவாதிகள் என்கவுன்டரில் பலி: ஜம்முவில் ஊடுருவல் முறியடிப்பு
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பலியானதை அடுத்து பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாரமுல்லா மாவட்டத்தில் உரி நலாவில் சர்ஜீவன் பொதுப்பகுதியில் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு வழியாக நேற்று தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர். பாதுகாப்பு படை வீரர்கள் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து வீரர்கள் மீது அவர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதற்கு வீரர்கள் கொடுத்த பதிலடியில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தொடர்ந்து அந்த பகுதியில் துப்பாக்கி சூடு நடந்து வருகின்றது. இதேபோல் குல்காம் மாவட்டத்தில் டாங்மார்க் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அந்த பகுதி வீரர்களால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை வெடித்துள்ளது. இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
* பயங்கரவாதத்திற்கு இந்தியா அடிபணியாது தீவிரவாதிகள் ஒருவரும் தப்ப முடியாது: இறுதி அஞ்சலி செலுத்திய பின் அமித்ஷா உறுதி
பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலில் பலியான 26 பேரின் உடல்களும் நேற்று அதிகாலை ஸ்ரீநகரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டது. அங்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று காலை பலியானோரின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் தாக்குதலில் உயிர் தப்பியவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, கொடிய தாக்குதலில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த பாதுகாப்பு படையினர் அனைத்து முயற்சிகளையும் எடுப்பார்கள் என்று அவர்களிடம் உறுதி அளித்தார். மேலும், தாக்குதலில் காயமடைந்து நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களையும் அமித்ஷா சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதுதொடர்பாக நேற்று தனது எக்ஸ் தள பதிவில் அமித்ஷா, ‘‘பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு கனத்த இதயத்துடன் இறுதி மரியாதை செலுத்தினேன். பஹல்காம் தீவிரவாதத்திற்கு இந்தியா அடிபணியாது. அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் வலியை ஒவ்வொரு இந்தியரும் உணர்கிறார்கள். இந்த சோகத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. அப்பாவி மக்களைக் கொன்ற பயங்கரவாதிகள் தப்பிக்க மாட்டார்கள் என பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் முழு நாட்டிற்கும் நான் உறுதியளிக்கிறேன்’’ என்றார். முன்னதாக, தாக்குதல் நடந்த பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியை அமித்ஷா ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.
* தாக்குதலில் இருந்து தப்பிய 3 கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள்
கேரள உயர்நீதிமன்ற 3 நீதிபதிகள் கடந்த இரு தினங்களுக்கு முன் இதே பஹல்காம் பகுதிக்கு குடும்பத்துடன் சென்று திரும்பியது தெரியவந்துள்ளது. நீதிபதிகளான அனில் கே. நரேந்திரன், அஜித்குமார் மற்றும் கிரீஷ் ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றனர். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய அதே பகுதிக்கு இவர்கள் கடந்த இரு தினங்களுக்கு முன் குடும்பத்துடன் சென்று சுற்றிப் பார்த்துவிட்டு திரும்பினர். 2 நாள் தாமதமாக இந்த இடத்திற்கு சென்றிருந்தால் இவர்களுக்கும் தீவிரவாதிகளால் ஆபத்து ஏற்பட்டிருக்கும்.
* சதிக்கு பின்னால் இருப்பவர்களையும் விடமாட்டோம்
காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக டெல்லியில் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து ராஜ்நாத் சிங் அளித்த பேட்டியில், ‘‘பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளையும், அவர்களை வழிநடத்தியவர்களையும் அடையாளம் கண்டு அவர்களை நீதியின் முன் நிறுத்துவோம். இதுபோன்ற செயல்களுக்கு பொறுப்பானவர்களுக்கு விரைவில் வலுவான பதிலடி தருவோம். சதிக்கு பின்னால் இருப்பவர்களையும் விட மாட்டோம்’’ என்றார்.
* கலிமா உறுதிப்பிரமாணம் எடுக்கக் சொல்லி சுட்டு கொன்ற தீவிரவாதிகள்: ‘உங்கள் அரசிடம் போய் சொல்’ என்றும் மிரட்டல்
பலியான 26 பேரில் கான்பூரைச் சேர்ந்த 31 வயது இளம் தொழிலதிபர் சுபம் திவிவேதியும் ஒருவர். இவருக்கு 2 மாதத்திற்கு முன்பாக கடந்த பிப்ரவரி 12ம் தேதி திருமணமாகி உள்ளது. மனைவியுடன் தேனிலவு கொண்டாட காஷ்மீர் சென்றுள்ளார். அவருடன் சுபமின் பெற்றோர், சகோதரி உள்ளிட்ட குடும்பத்தினர் 9 பேரும் சென்றுள்ளனர். தாக்குதல் நடந்த போது, சுபமும் அவரது மனைவி மட்டும் குதிரை சவாரி செல்வதற்காக புல்வெளிப் பகுதிக்கு சென்றுள்ளனர். மற்ற குடும்பத்தினர் தங்கியிருந்த ஓட்டல் அருகில் இருந்துள்ளனர். துப்பாக்கியுடன் வந்த தீவிரவாதிகள் சுபமின் மனைவி கண்முன்னே அவரை நெற்றியில் சுட்டுக் கொன்றுள்ளனர்.
இதைப்பார்த்து சுபமின் மனைவி கதறி துடித்துள்ளார். மேலும், கொல்வதற்கு முன்பாக இஸ்லாமியர்கள் உறுதிமொழி ஏற்கும் கலிமாவை சொல்லுமாறு சுபமை தீவிரவாதிகள் கட்டாயப்படுத்தி உள்ளனர். அவர் சொல்ல மறுத்ததும் சுட்டுக் கொன்றுள்ளார். மேலும் அவரது மனைவியிடம், ‘‘உனது கணவனுக்கு என்ன நடந்தது என்பதை உன் அரசாங்கத்திடம் போய் சொல்’’ என கூறி உள்ளனர். இதே போல, இந்தூரைச் சேர்ந்த எல்ஐசி மேலாளர் சுனில் நதானியல் (58) என்பவரையும் அவரது மனைவி, மகன், மகள் கண் எதிரே தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். ஈஸ்டர் கொண்டாட குடும்பத்துடன் காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற அவர்களின் கொண்டாட்டம் சோகமயமாகி உள்ளது. சுனிலின் மனைவி கூறுகையில், ‘‘எனது கணவரிடம் வந்த தீவிரவாதிகள் பெயரையும், மதத்தையும் கேட்டனர். பின்னர் மண்டியிடச் சொல்லி கலிமா சொல்ல வற்புறுத்தினர். அவர் மறுத்ததால் சுட்டுக் கொன்றுள்ளனர். தப்பி ஓட முயன்ற எனது மகள் அகன்க்ஷாவின் காலில் அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர்’’ என்றார்.
* கேரளாவை சேர்ந்தவர் பலி மகள் கண்ணெதிரே சுட்டுக் கொன்றனர்
பஹல்காம் பயங்கர தாக்குதலில் கேரள மாநிலம் கொச்சி இடப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (65) என்பவரும் கொல்லப்பட்டுள்ளார். நீண்ட காலமாக துபாயில் பணிபுரிந்து வந்தவர் கடந்த வருடம் தான் ஊருக்கு திரும்பினார். குடும்பத்துடன் துபாயில் வசித்து வரும் அவரது மகள் அஸ்வதி கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்தார். இந்தநிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு தான் ராமச்சந்திரன், மனைவி ஷீலா, மகள் அஸ்வதி அவரது 2 குழந்தைகள் ஆகியோர் ஹைதராபாத் வழியாக காஷ்மீருக்கு சுற்றுலா சென்றனர். நேற்று முன்தினம் தீவிரவாத தாக்குதல் நடந்த பஹல்காம் பகுதிக்கு ராமச்சந்திரனும், மகள் அஸ்வதியும் மட்டுமே சென்றிருந்தனர். மற்ற அனைவரும் அவர்கள் தங்கியிருந்த ஓட்டலிலேயே இருந்தனர். ராமச்சந்திரனும், அஸ்வதியும் பஹல்காம் பகுதியை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தபோது தான் தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுற்றுலாப் பயணிகளை நோக்கி சுட்டனர். இதில் ராமச்சந்திரனும் இறந்தார். மகள் அஸ்வதியின் கண்ணெதிரே தான் ராமச்சந்திரன் சுடப்பட்டார். அதைப் பார்த்து அஸ்வதி கதறி அழுதார்.
* உச்ச நீதிமன்றம் கண்டனம்
ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. உச்ச நீதிமன்றம் நேற்று காலை தொடங்கியதும் ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலை கண்டித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில், “இந்த கொடூர வன்முறை அனைவரது மனசாட்சியையும் உலுக்கி உள்ளது. இந்த தாக்குதல் தீவிரவாதம் கட்டவிழ்த்து விடும் கொடூரமான, மனிதாபிமானமற்ற செயலை தௌிவாக நினைவூட்டுகிறது.
இந்தியாவின் கிரீடமான இயற்கை அழகு கொண்ட நகரில் இயற்கை அழகை ரசித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மனித குலத்தின் மதிப்புகள், வாழ்க்கையின் புனிதத்தன்மைக்கு எதிரானது. உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தி அடையட்டும். காயமடைந்தவர்கள் விரைவில் குணம் பெற விரும்புகிறோம். விவரிக்க முடியாத இந்த துயரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் தேசம் என்றும் துணை நிற்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நீதிபதிகள், வழக்கறிஞர்கள், ஊழியர்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் இருந்த அனைவரும் 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர்.
* கடற்படை வீரர் சடலத்திற்கு மனைவியின் இறுதி சல்யூட் கண்கலங்க வைத்த சம்பவம்
பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களில் இந்திய கடற்படை வீரர் வினய் நர்வாலும் (வயது 26) ஒருவர். அரியானாவைச் சேர்ந்த இவருக்கு கடந்த 16ம் தேதி திருமணமானது. கடந்த 19ம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, மனைவி ஹிமான்ஷி நர்வாலுடன் வினய் காஷ்மீருக்கு தேனிலவு சென்றார். பஹல்காமில் புதுமணத் தம்பதிகள் இருவரும் பேல்பூரி சாப்பிட்டுக் கொண்டிருந்த போது வந்த தீவிரவாதிகள் வினய் நர்வாலை சுட்டுக் கொன்றனர். திருமணமான 7 நாளில் கணவன் தன் கண்எதிரே சுட்டுக் கொல்லப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஹிமான்ஷி கணவரின் சடலத்திற்கு அருகில் சோகத்துடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் உலகையே உலுக்கியது. இந்நிலையில், வினய் நர்வாலின் உடல் விமானம் மூலம் டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்டது.
அங்கு, தேசியக் கொடி போர்த்தப்பட்டு, வினய் நர்வாலின் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியை அவரது மனைவி கட்டிப்பிடித்து கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்தது. அப்போது உடைந்து போன குரலில் ஹிமான்ஷி, ‘‘அவரது ஆன்மா சாந்தி அடையட்டும். அவர் நல்ல வாழ்க்கை வாழ்ந்துள்ளார். எங்களை பெருமைப்படுத்தி உள்ளார். ஒவ்வொரு வகையிலும் அவரை நாங்கள் பெருமைப்படுத்துவோம்’’ என்றார். பின்னர் கண்ணீரை துடைத்துக் கொண்ட அவர் கணவரின் சடலத்திற்கு இறுதி சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார். டெல்லி விமான நிலையத்தில் இருந்து வினய் நர்வாலின் உடல் சொந்த ஊரான அரியானாவின் கர்னலுக்கு கொண்டு செல்லப்பட்டது.
The post 48 மணி நேரத்தில் இந்தியாவை விட்டு பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு: காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலை அடுத்து பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் அதிரடி முடிவு appeared first on Dinakaran.