40 வயதை தாண்டியவர்கள் உஷார் மார்பக புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படும் இளம்பெண்கள்: நிபுணர்கள் எச்சரிக்கை

4 weeks ago 7

புதுடெல்லி: இந்தியாவில் இளம்பெண்களிடையே மார்பக புற்றுநோய் பெருமளவில் அதிகரித்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மார்பகப் புற்றுநோயானது உலகளவில் பெண்களை பாதிக்கும் பொதுவான வகை புற்றுநோயாக உள்ளது. இது இந்தியாவிலும் விதிவிலக்கில்லை. ஆனால் நீண்ட காலமாக முதியவர்கள் மட்டுமே மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 30 ஆண்டுகளில் 50 வயதுக்கு குறைவான பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவது பெருமளவில் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் 28.2 சதவீதம் மார்பக புற்றுநோயாகும். பிரபல பாலிவுட் நடிகைகள் சோனாலி பிந்த்ரே, தாஹிரா காஷ்யப், மஹிமா சவுத்ரி போன்ற 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் மார்பக புற்றுநோயை எதிர்த்து போராடி, சிகிச்சை மூலம் கொடிய நோயை வென்றவர்கள் ஆவர்.
இந்தியாவில் புற்றுநோய் இல்லாத பாரதம் என்னும் பிரசாரத்தை நடத்தி வரும் யுனிக் ஹாஸ்பிடல் கேன்சர் சென்டரின் மெடிக்கல் ஆன்காலஜி துறை தலைவரான டாக்டர் ஆஷிஷ் குப்தா கூறுகையில், ‘‘புற்றுநோய் இனி முதியவர்களின் நோய் அல்ல.

இது இளம் வயதினரிடையே, முக்கியமாக 50 வயதுக்கு கீழான பெண்களிடையே அதிகமாகக் காணப்படுகிறது. புற்றுநோய் இல்லாத பாரதம் அறக்கட்டளையின் சமீபத்திய ஆய்வின்படி, இந்தியாவில் 40 வயதுக்குட்பட்ட இளம்பெண்களில் சுமார் 20 சதவீதம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இளம் வயதினரில் 15 சதவீதம் பேர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். மார்பக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்து சரியான நேரத்தில் சிகிச்சையளிப்பது பாதிக்கப்பட்ட நபர்களின் ஆயுளை கணிசமாக அதிகரிக்கும்.

இதற்காக, பரிசோதனை நடைமுறைகளை சிறப்பாகவும் அணுகக்கூடியதாகவும் மாற்றுவது முக்கியமானது. குறிப்பாக பரிசோதனைகளின் செலவு குறைக்கப்படுவது போன்றவை இந்தியாவில் அதிகரித்து வரும் மார்பக புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு அவசியம். புற்றுநோய் கண்டறியப்பட்டவுடன் மக்கள் பீதி அடைய வேண்டாம்’’ என்றார்.

டெல்லி மேக்ஸ் மருத்துவமனையின் மூத்த கதிரியக்க புற்றுநோயியல் நிபுணரும், லீனஸ் ஆன்காலஜி இன்ஸ்டிட்யூட்டின் இயக்குநருமான டாக்டர் வினீத் நக்ரா கூறுகையில், ‘‘தாமதமாக குழந்தை பெற்றுக் கொள்வது, தாய்ப்பால் கொடுப்பதை குறைப்பது மற்றும் மோசமான உணவுத் தேர்வுகள் உள்ளிட்ட வாழ்க்கைமுறை மாற்றங்கள் காரணமாக நகர்ப்புற இளம் பெண்களிடம் மார்பகப் புற்றுநோய் அதிகரித்து வருகிறது’’ என்றார்.

 

The post 40 வயதை தாண்டியவர்கள் உஷார் மார்பக புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படும் இளம்பெண்கள்: நிபுணர்கள் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article