சென்னை: ஜெயலலிதா மறைவுக்குப் பின் 40 எம்.எல்.ஏ.க்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக சபாநாயகர் கூறியது எப்படி அவதூறாகும்? என அதிமுக நிர்வாகிக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. சென்னையில் கடந்த ஆண்டு நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சபாநாயகர் அப்பாவு ஜெயலலிதா மரணமடைந்த நேரத்தில் 40 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாகவும் ஆனால் அதனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கவில்லை என்று மறுத்துவிட்டதாகவும் ஒரு கருத்து தெரிவித்திருந்தார்.
இது அதிமுக எம்.எல்.ஏகளுக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக வழக்கறிஞரணி இணை செயலாளர் பாபு முருகவேல் அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருக்கக்கூடிய எம்.பி, எம்.எல்.ஏ களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை ரத்து செய்ய கோரியும், விசாரணைக்கு தடை விதிக்க கோரியும் சபாநாயகர் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவனானது நீதிபதி ஜெயசந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது சபாநாயகர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் அவதூறு வழக்கில் தாக்கல் செய்துள்ள பாபு முருகவேலுக்கு எதிராக மனுதாரர்கள் கருத்து தெரிவிக்கவில்லை என்றார். அதற்கு பதிலளித்த பாபு தரப்பு வழக்கறிஞர் கட்சியின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் பேசியிருப்பதால் கட்சி சார்பில் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும் அதற்கு கட்சி அங்கீகாரம் வழங்கி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சபாநாயர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் அரசியல் கட்சி சார்பில் வழக்கை தாக்கல் செய்திருந்தால் தலைவரோ அல்லது பொதுச்செயலாளரோ தான் தாக்கல் செய்ய முடியும் என சுட்டி காட்டினார்.
அப்போது குறிப்பிட்ட நீதிபதி அவதூறு வழக்கு தாக்கல் செய்ய என்ன அடிப்படை உரிமை உள்ளது என்றும் .40 எம்.எல்.ஏ.க்கள் எவரும் வழக்கு தாக்கல் செய்யவில்லை என்றும் அப்பாவும் தனது பேச்சில் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். உங்கள் கட்சிக்கு அவர் அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசவில்லை என்றும் மனுதாரர் தரப்பில் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் கட்சியின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டு விட்டதாக கற்பனையாக கூறமுடியாது. என பாபு முருகவேல் தரப்புக்கு அறிவித்த நீதிபதி அதிமுக ஆட்சி 5 ஆண்டுகால பதவியை பூர்த்தி செய்தது. எவரும் கட்சி தாவவில்லை. சபாநாயர் பேச்சால் எப்படி அதிமுகவின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டது என்ற கேள்வியும் அவர் முன்வைத்தார். தொடர்ந்து அப்பாவு ஆஜராவதில் கீழ் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து விலக்கு பெற்று கொள்ளும்படி அப்பாவு தரப்புக்கு வலியுறுத்தினார். இது குறித்து அப்பாவுவின் வழக்குக்கு பதிலளிக்குமாறு பாபு முருகவேலுக்கு உத்தரவிட்ட நீதிபதி இந்த வழக்கு விசாரணையை வரும் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
The post 40 எம்.எல்.ஏ.க்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக சபாநாயகர் கூறியது எப்படி அவதூறாகும்?: அதிமுக நிர்வாகிக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி appeared first on Dinakaran.