40 ஆண்டுகளாக நடைபாதை இல்லாமல் இறந்தவர் உடல்களை தொட்டில் கட்டி தூக்கிச்செல்லும் அவலம்

3 weeks ago 5

குன்னூர் : குன்னூர் காந்திபுரம் அருகே 40 ஆண்டுகளாக நடைபாதை இல்லாமல், நோயாளிகள், இறந்தவர் உடல்களை தொட்டில் கட்டி தூக்கிச்செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் காந்திபுரம் அருகே கருமாரியம்மன் கோவில் தெரு பகுதியில் சுமார் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள மக்கள் விவசாயம், தேயிலை பறிப்பது மற்றும் நகர பகுதி தொழில்களை மட்டுமே தங்களது வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அப்பகுதியில் போதிய நடைபாதை வசதி இல்லாத காரணத்தால் கர்ப்பிணி பெண்கள் மற்றும் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை தொட்டில் கட்டி தூக்கி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள், நடைபாதை வசதி ஏற்படுத்தி தர பலமுறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தும் தற்போது வரை நடைபாதை வசதி அமைத்து தரவில்லை என கூறுகின்றனர்.

மேலும் அப்பகுதியில் இறந்த ஒருவரின் உடலை தொட்டில் கட்டி சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூக்கி செல்ல வேண்டியுள்ளது என குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில் ”கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக போதிய நடைபாதை வசதி இல்லாததால் அத்தியாவசிய தேவைக்குக் கூட இங்குள்ள மக்கள் அவதிப்படுகிறார்கள்.

உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கு ஆம்புலன்ஸ் கூட வந்து செல்ல முடியாத காரணத்தினால் பாதிக்கப்படுபவர்களை சரியான நேரத்திற்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் உள்ளதாகவும், மேலும் தூக்கி செல்லும் போது இடைப்பட்ட தூரத்தில் இறந்து விடுவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

மேலும் நோயாளிகளை கிராமத்தில் இருந்து குறிப்பிட்ட தூரம் வரை தொட்டில் கட்டி கொண்டு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். எனவே அப்பகுதியில் நடைபாதை அமைத்து தரவேண்டும் என மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post 40 ஆண்டுகளாக நடைபாதை இல்லாமல் இறந்தவர் உடல்களை தொட்டில் கட்டி தூக்கிச்செல்லும் அவலம் appeared first on Dinakaran.

Read Entire Article