புனே,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடரில் இந்தியா 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டி20 போட்டி புனேயில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
முன்னதாக இந்தத் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி முதல் 2 போட்டிகளில் களமிறங்கவில்லை. இது பலரது மத்தியிலும் பேசு பொருளானது. ஏனெனில் கடந்த ஒருநாள் உலகக்கோப்பையில் சந்தித்த காயத்துக்காக அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் குணமடைவதற்கு 14 மாதங்கள் ஆனது. அவர் விளையாடாதது கடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்களில் இந்தியாவின் தோல்விக்கு ஒரு காரணமானது.
இதனையடுத்து முழுமையாக குணமடைந்த ஷமி சமீபத்திய உள்ளூர் தொடர்களில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினார். அதன் காரணமாக இத்தொடரில் தேர்வு செய்யப்பட்ட அவர் முதல் 2 போட்டிகளில் விளையாடாதது அவருக்கு காயம் முழுமையாக குணமடைந்து விட்டதா? என்ற சந்தேகத்தை கிளப்பியது.
இதன் பின் நடைபெற்ற 3-வது போட்டியில் முகமது ஷமி விளையாடினார். ஆனால் அதில் விக்கெட்டுகள் எடுக்காத அவர் 3 ஓவர்கள் மட்டுமே வீசினார். இதனையடுத்து நேற்று நடைபெற்ற 4-வது போட்டியில் முகமது ஷமி அணியிலிருந்து நீக்கப்பட்டார். இதனால் சாம்பியன்ஸ் டிராபி விரைவில் நடைபெற உள்ள நிலையில் மீண்டும் அவர் காயத்தை சந்தித்து விட்டாரா? என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்தது.
இந்நிலையில் அணியின் கலவைக்காகவும் ஓய்வை கருத்தில் கொண்டும் ஷமி 4-வது போட்டியில் விளையாடவில்லை என்று பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கல் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "ஷமி நன்றாக பவுலிங் செய்து வருகிறார். அவரை வலைப் பயிற்சியில் நான் பார்த்து வருகிறேன். அவர் எங்களுடன் விளையாடுவது மகிழ்ச்சி. அணியின் கலவைக்காகவும் ஓய்வை கருத்தில் கொண்டும்தான் அவர் இந்த போட்டியில் இடம்பெறவில்லை. அவருக்கு அடுத்தப் போட்டியில் வாய்ப்பு கிடைக்கலாம். அதற்கு விஷயங்கள் எப்படி செல்கிறது என்பதை நாங்கள் பார்க்க வேண்டும். ஆனால் அவர் மீண்டும் எங்களுடைய அணியில் வந்ததில் மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறோம். விளையாடுகிறார் என்பதைத் தாண்டி அவர் பயிற்சியில் அவருடைய அனுபவத்தையும் அறிவையும் கொடுப்பதே எங்களுடைய இளம் பவுலிங் துறைக்கும் இந்திய கிரிக்கெட்டுக்கும் பெரிய புத்துணர்ச்சியைக் கொடுக்கும். எனவே ஷமி மீண்டும் அணியில் வந்தது சிறப்பான விஷயம். " என்று கூறினார்.