* இந்த ஆண்டுக்குள் 6 லட்சம் பேருக்கு பட்டா, கூடுதலாக 50,000 பேருக்கு முதியோர் ஓய்வூதியம், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தகவல்
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மானிய கோரிக்கையின்போது அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசியதாவது: திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, 13 லட்சத்து 82 ஆயிரம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் ஒரு மாதத்திற்கு 50 ஆயிரம் பட்டாக்கள் என 6 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட உள்ளது. அதேபோல, சென்னை மற்றும் சென்னைப் புறநகரை ஒட்டியிருக்கின்ற வீட்டுவசதி வாரியத்தின் மூலமாக வீடு வாங்கியவர்கள், நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் மூலம் வீடு வாங்கியவர்கள் ஆகியோர்களுக்கெல்லாம் நேரடியாக பட்டா கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த அரசு பொறுப்பேற்ற கடந்த 4 ஆண்டு காலத்தில், 35,654 ஏக்கர் அரசாங்க நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. அதன் மதிப்பு சுமார் ரூ.20,325 கோடியாகும். கோயம்புத்தூர், மதுரை, தூத்துக்குடி விமான நிலையத்திற்கு முழுவதுமாக நிலம் எடுத்துக் கொடுத்துவிட்டோம். நில அளவைத் துறை இந்தியாவிலேயே முதன்முதலில் சென்னையில்தான் ஆரம்பிக்கப்பட்டது. 4 வருடத்தில் 1 கோடியே 11 லட்சம் பேருக்கு இ-பட்டா வழங்கப்பட்டுள்ளது.
சராசரியாக மாதம் ஒன்றுக்கு 6 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு பட்டா கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த வேலை நடந்து கொண்டிருக்கிறது. அதேபோல, மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலமாக இதுவரை 22 லட்சத்து 59 ஆயிரம் மனுக்கள் தீர்வு செய்யப்பட்டுள்ளன. கடந்த நான்காண்டு காலத்தில் மொத்தம் ரூ.15,272 கோடி நிவாரணமாக மட்டும் கொடுத்திருக்கிறார்.
அ.தி.மு.க.வின் பத்து வருட ஆட்சிக் காலத்தில் 1 கோடியே 46 லட்சம் ரூபாயை ஒன்றிய அரசிடம் கேட்டிருக்கிறார். ஆனால், ரூ.6,687 கோடி ரூபாய்தான் கொடுத்திருக்கிறார். தி.மு.க. ஆட்சியின் கடந்த நான்கு வருட ஆட்சிக் காலத்தில் 50 ஆயிரத்து 812 கோடி ரூபாய் கேட்கப்பட்டது. வெறும் ரூ.629 கோடி நமக்கு கொடுத்தார். பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.15,222 கோடி நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக 50 பேருக்கு முதியவர் ஓய்வூதியம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.
The post 4 ஆண்டுகளில் புயல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு ரூ.15,872 கோடி நிவாரண உதவி appeared first on Dinakaran.