3வது டி.20 போட்டியில் இங்கிலாந்து வெற்றி; பவர் பிளேவில் விக்கெட்டுகளை எடுத்தது தான் திருப்புமுனை: கேப்டன் பட்லர் பேட்டி

1 week ago 3

ராஜ்கோட்: இந்தியா-இங்கிலாந்துகிரிக்கெட் அணிகள் இடையே 5 போட்டிகொண்ட டி.20 தொடரில் முதல் 2 போட்டியிலும் இந்தியா வெற்றிபெற்ற நிலையில் 3வது போட்டி நேற்றிரவு ராஜ்கோட்டில் நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த இங்கிலாந்து 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 171 ரன் எடுத்தது. அதிகபட்சமாக பென் டக்கெட் 28பந்தில் 7பவுண்டரி, 2 சிக்சருடன் 51, லிவிங்ஸ்டன் 24 பந்தில் ஒருபவுண்டரி, 5 சிக்சருடன் 43, கேப்டன் பட்லர் 24 ரன் எடுத்தனர். இந்திய பவுலிங்கில் வருண் சக்ரவர்த்தி 4 ஓவரில் 24 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். ஹர்திக் பாண்டியா 2 விக்கெட் எடுத்தார்.

பின்னர் களம்இறங்கிய இந்திய அணியில் சஞ்சு சாம்சன் 3, அபிஷேக் சர்மா 24, சூர்யகுமார்யாதவ் 14, திலக்வர்மா 18, வாஷிங்டன் சுந்தர் 6, அக்சர் பட்டேல் 15 ரன்னில் வெளியேற அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 40ரன் எடுத்தார். 20 ஓவரில் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்களே எடுத்தது. இதனால் 26 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்துவெற்றிபெற்றது. அந்த அணியின் பவுலிங்கில் ஜேமி ஓவர்டன் 3, ஆர்ச்சர்,பிரைடன் கார்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். வருண் சக்ரவர்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

வெற்றிக்கு பின் இங்கிலாந்து கேப்டன் பட்லர் கூறுகையில், ”எங்கள் அணி பவுலர்கள் இன்று மிகச் சிறப்பாக பந்து வீசினர். தங்களுடைய திறமையை இன்று அவர்கள் வெளிக்காட்டினர். அடில் ரஷித் மிகவும் முக்கியமான வீரராக இருக்கிறார். அவரிடம் நிறைய பந்துவீச்சு வகைகள் உள்ளன. பந்தின் வேகத்தையும் மாற்றி வீசுவார். அவர் அணியில் இருப்பது எங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டமாகவே நான் நினைக்கிறேன். ஜோப்ரா ஆர்ச்சர் குறித்து அதிகம் பேச தேவையில்லை. எங்கள் அணியின் சூப்பர் ஸ்டார் அவர். தொடர்ந்து அபாரமாக செயல்பட்டு வருகிறார். ஒருநாள் 60ரன் கொடுத்தால், அடுத்த நாளே அவர் மீண்டும் கம்பேக் கொடுத்து விடுவார். பென் டக்கெட் அதிரடியாக ஆட கூடியவர். அவர் தனது வழக்கமான பேட்டிங்கை ஆரம்பித்து விட்டால் தடுத்து நிறுத்துவது மிகவும் கடினம், 170 ரன் என்பது மிகவும் நல்ல இலக்காகவே நான் நினைக்கிறேன்.

அதுவும் 127 ரன்னுக்கு 8 விக்கெட்டுகளை இழந்த போதிலும் 170 ரன் தொடுவதெல்லாம் மிகவும் நல்ல விஷயம். ரஷித்- மார்க் வுட் கடைசி விக்டெ் பார்ட்னர்ஷிப் தான் ஆட்டத்தில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பவர் பிளேவில் இந்திய விக்கெட்டுகளை எடுத்தது திருப்புமுனையாக அமைந்தது என்று நினைக்கின்றேன்”, என்றார். தோல்வி குறித்து சூர்யகுமார் யாதவ் கூறுகையில், 2வது பேட்டிங் செய்யும்போது பனிப்பொழிவு இருக்கும். இதன் மூலம் பேட்டிங்கிற்கு சாதகமாக ஆடுகளம் மாறும் என நினைத்தேன். ஆனால் அப்படி நடக்கவில்லை. ஹர்திக், அக்சர் பட்டேலும் களத்தில் இருந்த போது, 24 பந்தில் 55 ரன் தான் தேவைப்பட்டது. இதனால் போட்டி எங்கள் கைக்குள் தான் இருந்தது என்று நான் நினைத்தேன்.

ஆனால் ரஷித் அபாரமாக பந்து வீசினார். சிங்கிள் ரன் கூட ஓடவிடாமல் அவர் தடுத்தார். இதனால்தான் அவர் உலகத்தரம் வாய்ந்த பவுலராக இருக்கின்றார். டி20 போட்டியில் இருந்து எப்போதுமே நாம் புதுப்புது விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும். பேட்டிங்கில் நாங்கள் என்ன தவறு செய்தோம் என்பது குறித்து பாடம் கற்க வேண்டும். ஷமி பந்து வீசிய விதம் எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது, என்றார். 2-1 என தொடரில் இந்திய முன்னிலை வகிக்க 4வதுபோட்டிவரும் வெள்ளிக்கிழமை புனேவில் நடக்கிறது.

வெற்றி பெற முடியாதது வருத்தம்;
ஆட்டநாயகன் வருண் சக்ரவர்த்தி கூறுகையில், இன்று வெற்றி பெறாதது வருத்தம் அளிக்கிறது. ஆனால் இதுதான் டி20 கிரிக்கெட்டின் இயல்பு. இந்த தோல்வியிலிருந்து நகர்ந்து அடுத்த போட்டி நோக்கி செல்ல வேண்டும். நாட்டுக்காக நாம் விளையாடும் போது பல பொறுப்புகளை எடுத்துக்கொண்டு ஆட வேண்டும். தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதை நான் சரியாக செய்திருக்கிறேன் என நினைக்கின்றேன். என்னுடைய பந்துவீச்சு முறையில் ஃபிலிப்பர் ஸ்டைலை நான் கற்று வருகிறேன். இந்த போட்டியில் நான் சிறப்பாகவே பந்து வீசினேன் என நினைக்கிறேன். ஆனால் இன்னும் என்னால் சிறப்பாக செயல்பட முடியும், என்றார்.

The post 3வது டி.20 போட்டியில் இங்கிலாந்து வெற்றி; பவர் பிளேவில் விக்கெட்டுகளை எடுத்தது தான் திருப்புமுனை: கேப்டன் பட்லர் பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article