3ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை மாணவர்கள் பள்ளி புறக்கணிப்பு தலைமை ஆசிரியர் அதிரடி கைது: பள்ளிப்பட்டில் பரபரப்பு

1 month ago 5


திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு பேரூராட்சிக்கு உட்பட்ட ஆஞ்சநேய நகரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 15 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியராக செங்கல்வராயன் (59) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் அடுத்த ஆண்டு பணி ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில் கடந்த 5ம் தேதி பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கும் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு மாணவியை தலைமை ஆசிரியர் செங்கல்வராயன் பள்ளி கழிவறையில் வைத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம், அப்பகுதியில் கடந்த சில நாட்களாக சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், பள்ளி தலைமையாசிரியர் செங்கல்வராயன் மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார். இதனையடுத்து, பள்ளி மாணவியும் தனது குடும்பத்தினருடன் வெளியூருக்குச் சென்று விட்டார். பாலியல் புகார் குறித்து பள்ளிப்பட்டு போலீசார் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது பெற்றோரை திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மலர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தொடர் விசாரணை நடத்தியுள்ளார்.

மேலும், குழந்தை பாதுகாப்பு அலுவலரும் விசாரணை நடத்தினார். அப்போது தலைமை ஆசிரியர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்கவில்லை என்று சிறுமி மற்றும் அவரது பெற்றோர் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்தனர். பின்னர் போலீசார் விசாரணை முடிந்து 5 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், தற்போது தனக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி பேசிய வீடியோ நேற்று முன்தினம் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தை தொடர்ந்து, நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட பள்ளியில் பணிபுரியும் உதவி ஆசிரியை மற்றும் அப்பகுதி பொதுமக்களிடம் வருவாய்த் துறையினர், கல்வித்துறையினர் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவிக்கு தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, கடந்த சில நாட்களாக பள்ளிக்கு வரும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்ட நிலையில், தற்போது மாணவி பேசிய வீடியோ வைரலாகி வருவதால் பள்ளிக்கு வருவதை மாணவர்கள் மொத்தமாக புறக்கணித்துள்ளனர்.

இதுகுறித்து பள்ளி உதவி ஆசிரியை வட்டார கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவித்தார். வட்டார கல்வி அலுவலர் குமரகுருபரன் ஆஞ்சநேய நகருக்கு வந்து மாணவர்களின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை தங்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என்று மாணவர்களின் பெற்றோர் தெரிவித்தனர்.

இந்தநிலையில், சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாய் பள்ளிப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட திருத்தணி டிஎஸ்பி கந்தன், இன்ஸ்பெக்டர் மலர் ஆகியோர் நேற்று இரவு பள்ளிப்பட்டில் உள்ள தனது வீட்டில் இருந்த தலைமை ஆசிரியர் செங்கல்வராயனை அதிரடியாக கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

* பணம் கேட்டு மிரட்டலா?
பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம்சாட்டப்பட்ட பள்ளி தலைமையாசிரியரிடம், அப்பகுதி இருளர் மக்கள் பாதிக்கப்பட்ட சிறுமியை காரணம் காட்டி லட்சக்கணக்கில் பணம் தருமாறு கேட்டுள்ளனர். இதற்கு தலைமை ஆசிரியர் மறுப்பு தெரிவிக்கவே, பாதிக்கப்பட்ட சிறுமியை பேச வைத்து அதனை வீடியோ எடுத்து, தலைமை ஆசிரியரை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கில் அதனை சமூகவலைதளங்களில் வெளியிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து, பள்ளிப்பட்டு போலீசார் தலைமையாசிரியர் தன் குற்றத்தை மறைப்பதற்காக ஏதேனும் பணம் கொடுத்துள்ளாரா? அல்லது அவரிடம் பணம் பறிக்கும் நோக்கில் இதுபோன்ற செயலில் யாரேனும் ஈடுபட்டு வருகிறார்களா? என்ற கோணத்தில் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post 3ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை மாணவர்கள் பள்ளி புறக்கணிப்பு தலைமை ஆசிரியர் அதிரடி கைது: பள்ளிப்பட்டில் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article